Monday, 21 September 2015

ஒருவனுக்கு அவமானம் நேர்ந்தால் அவன் தர்மத்தை பின்பற்ற தவறினான் என்பது பொருள்!
கிருஷ்ணன்:- தர்மத்தை பற்றி அனைவரும் விவாதிப்பர் இருந்தாலும், எவரும் அது பற்றி அறிய முற்படுவதில்லை!
கர்ணன்:- தாமே கூறுங்கள் அதை அறியும் மார்க்கம் என்ன?
கிருஷ்ணன்:- தர்மம் அங்கீகாரத்தைப் பெற்றுத் தரவல்லது வாழ்வில் ஒருவனுக்கு அவமானம் நேர்ந்தால் அவன் தர்மத்தை பின்பற்ற தவறினான் என்பது பொருள்.
கர்ணன்:-ஒருவன் பிறப்பிலிருந்தே அவமானத்தை சகித்து வந்தால் அவன் ஆற்ற வேண்டிய பணி என்ன?
கிருஷ்ணன்:- அருகதையை பெற எதிர்த்து நிற்க வேண்டும் அது அதர்ம வழியில் இருக்கலாகாது உனது அதிகாரத்தைப் பெற துணிந்து நில் எனினும் உனக்கு அதிகாரமற்ற எதன் மீதும் மோகம் கொள்ளாதே! இதன் தாத்பரியம் யாதெனில் தன்னில் வழிந்தோடும் அருவி மீது உயர்ந்த பருவதம் இச்சைக் கொள்வதில்லை நதியை தடுக்கும் இச்சையை பருவதம் கொள்ளுமேயானால் அது உடைத்தெறியப்படும். நதி நீரின் அதிகாரம் பெற்றது சமுத்திரம் ஒன்றே!
கர்ணன்:- தம் வார்த்தை சமுத்திரத்தின் சக்தியைப் பற்றியதா? இல்லை பருவதத்தின் இயலாமையைப் பற்றியதா?
கிருஷ்ணன்:- கடலோடு நதி கொண்டிருக்கும் பற்றை பற்றியது கர்ணா...!

Saturday, 19 September 2015

மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம்!


மனசு சஞ்சலப்படுகிறதா?
ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.
புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றார்.
ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப்படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.
இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.
அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார்.
நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார்.
சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!
நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும்.
நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும். அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.

Saturday, 5 September 2015

அமைதி கொள் மனிதா!
வாடா மல்லிக்கு வண்ணம்
உண்டு வாசமில்லை,
வாசமுள்ள மல்லிகைக்கோ
வயது குறைவு.
வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,
கொம்புள்ள கடமானுக்கோ
வீரம் இல்லை.
கருங்குயிலுக்குத்
தோகையில்லை
தோகையுள்ள மயிலுக்கோ
இனிய குரலில்லை.
காற்றுக்கு
உருவமில்லை
கதிரவனுக்கு நிழலில்லை
நீருக்கு நிறமில்லை
நெருப்புக்கு ஈரமில்லை
ஒன்றைக் கொடுத்து
ஒன்றை எடுத்தான்,
ஒவ்வொன்றிற்கும் காரணம்
வைத்தான்,
எல்லாம் இருந்தும் எல்லாம் தெரிந்தும் கல்லாய் நின்றான்
இறைவன்.
அவனுக்கே இல்லை,
அற்பம் நீ உனக்கெதற்கு
பூரணத்துவம்?


எவர் வாழ்விலும் நிறைவில்லை


எவர் வாழ்விலும் குறைவில்லை
புரிந்துகொள் மனிதனே
அமைதி கொள் !


படித்ததில் பிடித்தது ...