Saturday, 27 August 2016

ஒரு குட்டி கதை

இரு 'நண்பர்கள்' பாலைவனத்தில் பயணம் செய்தனர். வெயிலும் பாலைவன சுடுமணலும் அவர்களின் பயணத்தைக் கடுமையாக்கின. கையில் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள்.

ஒரு கட்டத்தில் இருவரில் பணக்கார நண்பன், தன் உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று எரிச்சல் கொண்டான். அதனால் தன் ஏழை நண்பனுக்குப் பகிர்ந்து தராமல் அதிக உணவைத் தானே சாப்பிடத் தொடங்கினான். தண்ணீரையும் அவன் ஒருவனே குடித்து வந்தான். இதைக் கண்ட அந்த ஏழை நண்பன் கோபம் கொள்ளவே இல்லை.

பாலைவனத்தில் ஓரிடத்தில் ஈச்சை மரம் இருந்தது. அம்மரத்திலிருந்து விழுந்த பழங்களை ஏழையானவன் ஓடிப்போய்ப் பொறுக்கினான்.

உடனே பணக்காரன், அவை யாவும் தனக்கே சொந்தமானவை என்று சொல்லிப் பறித்தான். உன்னிடம்தான் தேவையான உணவு இருக்கிறதே. பிறகு ஏன் இதைப் பறிக்கிறாய் எனக்கு கேட்டான் ஏழை.

அப்படியானால் நான் உணவை வைத்துக்கொண்டு உன்னை ஏமாற்றுகிறேன் என்று குற்றம் சொல்கிறாயா? என்று சொல்லி கோபத்தில் ஏழையின் முகத்தில் ஓங்கி அடித்தான் பணக்காரன்.

அந்நேரமே இருவரும் பிரிந்து நடக்கத் தொடங்கினர். வலியும் அவமானமும் கொண்டவனாக பாலைவன மணலில், "இன்று என் நண்பன் என்னை அடித்து விட்டான்" என்று பெரிதாக எழுதி வைத்துவிட்டு நடந்தான் ஏழை.

ஓரிரு நாட்கள் இருவரும் தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள். அப்போது ஓரிடத்தில் சிறிதளவு தண்ணீர் இருப்பதைக் கண்டு ஓடிச் சென்று குடிக்க முயன்றான் பணக்காரன்.

திடீரென நண்பனின் நினைவு வந்தது. இவ்வளவு காலம் பழகிய நண்பனை ஒரு கஷ்டம் வந்ததும் ஏமாற்றி விட்டோமே என்று உணர்ந்து நண்பனைச் சத்தமிட்டு அழைத்தான்.

குரல் கேட்டு ஓடோடி வந்த ஏழை நண்பன் அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தான். இதிலுள்ள தண்ணீரை ஒருவர் மட்டுமே குடிக்க முடியும். நீயே குடித்துக்கொள் என்றான் பணக்காரன். உடனே ஏழை தாகம் மிகுதியில் தண்ணீரை முழுவதும் குடித்து விட்டு நண்பனை அணைத்துக்கொண்டு நன்றி தெரிவித்தான்.

பின்னர் இருவரும் ஒன்றாக நடக்கத் தொடங்கினர். ஏழை நண்பன் அங்கிருந்த ஒரு கல்லில், "என் நண்பன் இன்று மறக்க முடியாத ஓர் உதவி செய்தான்" என்று எழுதி வைத்தான்.

உடனே வானத்திலிருந்து ஒரு தேவதூதன் தோன்றி ஏழையிடம், அவன் உன்னை அடித்தபோது அதை "மணலில்" எழுதி வைத்தாய்.உதவி செய்தபோதோ அதைக் "கல்லில்" எழுதி வைக்கிறாய். அது ஏன்? என்று கேட்டான்.


"நடந்த தவறுகள் காற்றோடு போக வேண்டியவை. அதனால் அதை மணலில் எழுதினேன்".


ஆனால் "செய்த நன்றியை என்றும் மறக்கக் கூடாது. ஆகவே அதைக் கல்லில் எழுதி வைத்தேன்" என்றான் ஏழை.


ஒருவர் நமக்குச் செய்த தீமைகளை மறந்து அவர் செய்த நன்மைகளை நினைவில் வைத்திருந்தால் உறவுகள் மேம்படும். வாழ்வில் தேடித் தேடி நாம் சேகரித்து வைக்க வேண்டியது பணத்தை அல்ல; மனித உறவுகளை......!!!!

மலரட்டும்  மனித நேயம்...,

Tuesday, 23 August 2016

ஒரு குட்டி கதை

அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார் .ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார் .யாருமே ஊரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை . முனிவர் அல்லவா ? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு ..

”இன்னும் 50 வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது .வானம் பொய்த்துவிடும் ” … 


இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர் .. சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர் .வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர் … மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் ( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை ). இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான் …)


அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது … ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான் .அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர் .மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு … அவனிடம் கேட்டே விட்டனர் . நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா என்று ..அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம் ”’

50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும் . உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்பிடி என்றே எனக்கு மறந்து போயிருக்கும் ..அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன் ” என்றான் .

இது வானத்தில் இருந்த பரந்தாமனுக்கு கேட்டது .அவரும் யோசிக்க ஆரம்பித்தார் ..”50 வருசம் சங்கு ஊதமால் இருந்தால் எப்பிடி ஊதுவது என்று மறந்து போயிருமே ”.என்றே நினைத்து சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார் …. இடி இடித்தது …மழை பெய்ய ஆரம்பித்தது …நம்பிக்கை ஜெயித்து விட்டது .

” தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் ” "Self confident never fail" வெற்றி நிச்சயம் !!....👍