Friday, 23 September 2016

அமிலம்...மணி காலை 5.30.

தூக்கமே வரல.

இன்னும் மனிதாபிமானமும் இரக்க குணமும் மனுஷங்களுக்கு இருக்கா இல்ல பணத்த தேடி அலையுற வேளைல மத்த மனுஷங்களோட கஷ்டங்களையும் வேதனைகளையும் திரும்பி பாக்க நேரம் இல்லையான்னு தெரியல.

ஏதோ டீக்கடைளயும் நியூஸ்பேப்பர்லயும் அப்பப்ப பாக்குற ஒரு விஷயம்,  இவனுங்களுக்கு வேற வேலையே கிடையாதுன்னு அந்த செய்திகள படிக்காம விடற ஒரு விஷயம், முதல் முறையா என் கண்ணு முன்னாடி நடந்துச்சு.

முன்தினம் இரவு எட்டு மணி.

செம்மொழி உணவகம், அடையார், சென்னை. வணிகர் தினம்னாலோ, மழை பேஞ்சாலோ, தெருல ஏதாவது அரசியல் கட்சி மீட்டிங் நடந்தாலோ எல்லா ஹோட்டலையும் மூடிடுறாங்க. எங்கள மாதிரி பேச்சுலர் பசங்க சோறுக்காக ஹோட்டல் தேடி தேடி அலைய வேண்டியதா போயிடுது. நேத்து நடந்ததும் இதே கதை தான்.

செம்ம மழை. அப்டின்னுலாம் சொல்ல முடியாது. சென்னைக்கு அது பொருந்தவும் பொருந்தாது. லேசான மழைதான். ஆனா ஊரெல்லாம் தண்ணி.

எல்லா சின்ன ஹோட்டலும் மூடிட்டாங்க. நான் எப்பயும் கணக்கு வெச்சு சாப்படற அக்கா ஹோட்டலயும் காணோம். ஹோட்டல்ன்னா தள்ளு வண்டிக்கடை.

ஊரெல்லாம் சுத்தி கடைசியா நான் கண்ட ஹோட்டல்தான் இந்த ‘செம்மொழி உணவகம்’. இந்த ஹோட்டல்க்கு எதிர்த்தாமாதிரி ஒரு போலீஸ் ஸ்டேஷன்.

மழை தண்ணியினால சொதசொதன்னு தண்ணியா இருந்துச்சு ஹோட்டல். இந்த ஹோட்டல் ஒன்னு இங்க இருக்கறதே எனக்கு இன்னைக்குதான் தெரியும். புதுசா அடிச்சிருந்த பெய்ன்ட். அதுல வர்ற பெயிண்ட் வாசன , கல்லால உக்காந்துயிருந்தவரோட இரவு நேரத்து குங்கும பொட்டு, அவரு அந்த ஹோட்டல்ல வேலை செய்யுற பசங்கள ‘அந்த டேபிள கவனி’ , ‘சார்க்கு என்ன வேணும்னு கேளு’, ‘ மொதல்ல சாப்புட வந்தவங்களுக்கு தண்ணி வை பையா’ போன்ற வாக்கியங்கள் புது ஹோட்டல்தான்னு உறுதிபடுத்தினிச்சு.

வெளில மழைதூரிட்டு இருந்ததுக்கும் அடுப்புல தோசை ஊத்தறப்போ வந்த ஆவிக்கும் பசி இன்னும் அதிகமானிச்சு.

போயி ஒரு டேபிள்ல உக்காந்தேன். போட்டுட்டு வந்த தொப்பிய பக்கத்து ச்சேர்ல வெச்சுட்டு சுத்திமுத்தி பாத்துட்டிருந்தேன். அப்போ ஏதோ நேப்பாலா பீகாரான்னு தெரியல. அந்த முகஜாடை உள்ள ஒரு பையன் வந்து டேபிள சுத்தம் செஞ்சான்.

கொஞ்சம் தண்ணி எடுத்து டேபிள் மேல தெளிச்சு சின்ன முறம் மாதிரி ஒன்னு வெச்சு சரட்டு சரட்டுன்னு இழுத்தான். டேபிள்ல இருந்த தண்ணி லேசா என் மேல தெளிச்சுடுச்சு. ‘பாத்துப் பா’ன்னு சொல்லிட்டு நான் எழுந்துக்கிட்டேன். அத ஓனர் பாத்துட்டு அந்த பையன சத்தம் போட்டார். ‘பாத்து செய்ய மாட்டியா டா பய்யா. பாத்து கிளீன் கரோ’ன்னார்.

கொஞ்சம் ஹிந்தி. கொஞ்சம் தமிழ்.

‘பல கஷ்டமர்கள டீல் பண்ணுற முதலாளிங்க நெறைய மொழிகள் தெரிஞ்சு வெச்சுருக்காங்க. இந்த அரசியல்வாதிங்கதான் நம்மள ஹிந்தி கத்துக்கவிடாம தடுத்துட்டாங்க. ச்ச. ஒரு பாணி பூரி கடைக்கு போனாக்கூட சின்ன சின்ன சிட்டுபிட்டுலாம் கொஞ்சம் வெங்காயம் குடு பய்யான்னு ஹிந்தில கேக்குறாங்க. இன்னைக்கு ஹோட்டல் , முடி வெட்டுற கடை, சூப்பர் மார்க்கெட் , செக்யூரிட்டின்னு எல்லா எடத்துலயும் இந்த வடஇந்தியாக்காரங்க வந்துட்டாங்க. இங்க்லீஷ் மீடியம்ல படிச்சிட்டு நாம என்ன இங்கிலீஷ்ல பேசி கிழிச்சிட்டோம். எங்க போனாலும் தமிழ் , யார்ட பேசினாலும் தமிழ்தானே. இதுக்கு எதுக்கு ஹிந்திய கத்துக்க விடாம தடுத்தாங்க’ன்னு யோசிச்சுட்டு இருக்கப்போவே அந்த பய்யா தொடச்சு முடிச்சுட்டான்.

நான் டேபிள்ல உக்காந்தேன். டேபிள் மேல ஒரு தக்காளி சாஸ் பாட்டில் , சில்லி சாஸ் பாட்டில் இருந்துச்சு. அப்பறம் நாலு டம்ளர் ஒரு தட்டு மேல கவுத்திருந்துச்சு. பக்கத்துல ஒரு ஜார்-ல தண்ணி இருந்துச்சு. எனக்கு தோச சாப்புடலாமா பிரைட் ரைஸ் சாப்புடலாமான்னு மனசுக்குள்ள குழப்பம். ஒரு அண்ணன் வந்து ஆர்டர் கேட்டார்.

‘என்ன சாப்புடுறீங்க. ஒரே ஆர்டரா சொல்லிடுங்க சார். மழையினால கூட்டம் அதிகமா இருக்கு. சீக்கிரமா பார்சல் பண்ணி அனுப்பிட்டிருக்கோம்’ன்னாரு.

‘ஒரு சிக்கன் ரைஸ்’ண்ணா.

‘வேற சார். சைட் டிஷ் எதாவது?’-ன்னார்.

‘இல்லன்னா அவ்ளோதான்’, சொல்லிட்டு அந்த ஹோட்டல திரும்பி என்னலாம் இருக்குன்னு சுத்திமுத்தி பாத்துட்டு இருந்தேன். மழை அதிகமாயிட்டே இருந்துச்சு. நான் உக்காந்து இருந்த டேபிள்க்கு வலது பக்கத்துல ஒரு டேபிள். ரெண்டு பேர் சாப்பிட்டுட்டு இருந்தாங்க. பின்னாடி இன்னொரு டேபிள். அதுல அப்பதான் மூணு பசங்க கைலியோட வந்து உக்காந்தாங்க. எனக்கு இடதுபக்கத்துல இருந்த டேபிள்ல சாம்பார் , சட்னி, இலைலாம் வெச்சிருந்தாங்க.

என்கிட்ட ஆர்டர் எடுத்த அண்ணன் வந்து ‘ சார் , ரைஸ் கொஞ்சம் லேட் ஆகும். தோசை சொல்லிடலாமா’-ன்னாரு.

‘இல்லண்ணா வெயிட் பண்றேன். வெளில வேற ஏதும் ஹோட்டல் இல்ல. மறுபடி நைட் பசிச்சுதுன்னா திரும்ப அலைய முடியாது’-ன்னு சொன்னேன்.

‘சரி சார். ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க’-ன்னு சொல்லிட்டு அவர் போயிட்டார். அவர் காதுல போட்டிருந்த கடுக்கன் சின்னதா அழகா இருந்துச்சு.

ஹோட்டல் ஓனர் அப்பயும் ஏதோ சொல்லி கத்திட்டே இருந்தார்.

ஒரு சுவாரஸ்யமான பேச்சு ஒன்னு காதுல விழுந்துச்சு. கைலி கட்டிக்கொண்டு சாப்பிட வந்த பசங்களோட பேச்சு அது.

‘டேய் நீ தான் நேத்து அன்வர் கடைல சாப்பிட்டப்போ நாலு பரோட்டா சாப்பிட்டல்ல. இன்னைக்கு நான் நாலு நீ மூணு இவன் மூணு’

‘இன்னைக்கு நான் சாப்புட்டுக்கறேன் டா. நீ நாளைக்கு சாப்புட்டுக்க’

‘மொத்தம் நூறு ரூபா இருக்கு. அது இல்லாம ஏழு ரூபா சில்ற இருக்கு. கரக்டா பத்து ப்ரோட்டாதான் வரும்’ சாப்பாட்டுக்கு எவ்ளோ கஷ்டம். எவ்ளோ சம்பாதிச்சாலும் சாப்பாடுக்கு மட்டும்தான் செலவு பண்ண முடியுங்கற நெலமை சீக்கிரமே வந்துடும் போலன்னு நெனச்சுக்கிட்டே இருக்கப்போ, ‘தம்பி என்னப்பா சாப்புடறீங்க’ ன்னு பின்னாடி இருந்த டேபிள்ல ஆர்டர் எடுத்தார் எனக்கு ஆர்டர் எடுத்த அண்ணன்.

‘ஒரு நாலு ரெண்டு மூணு புரோட்டா அண்ணே’

‘புரோட்டா காலிப்பா’

‘இல்லையா ?!?!?’-ன்னு கோரஸ்ஸா மூணு பேரும் அதிர்ச்சியா கேட்டாங்க. எனக்கும் அதிர்ச்சி. ‘வேற ஏதும் சாப்புடறிங்களா?’ன்னு கேட்டார் அந்த அண்ணன்.

நான் திரும்பி அவர் கடுக்கன்-ன இன்னொரு முறை பாத்தேன்.

என் பக்கம் அவர் திரும்பி ‘சார் போட்டுட்டு இருக்காங்க. ரெண்டு நிமிஷம்’-ன்னார். நான் மறுபடி என் டேபிள் பக்கம் திரும்பிட்டேன்.

இப்போ நினைப்பெல்லாம் அந்த பசங்க பத்திதான். கையில காசு கம்மியாதான் இருக்கு. அவனுங்க பசி தீத்துக்கலாம்ன்னு நெனச்ச பரோட்டா தீந்துபோச்சு.

என்ன பண்ண போறாங்களோ-ன்னு யோசிச்சுட்டு இருக்கப்போவே அந்த ஆர்டர் எடுக்கற அண்ணன், ‘தம்பிங்களா காசு இல்லையா டா. இப்படி ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கறீங்க. ரெண்டு ஒன் பை டூ எக் ரைஸ் தரட்டுமா? நூத்தி பத்து ரூபா வரும். இருக்கா’ன்னார். ‘ண்ணா மூணு ரூபா கம்மியா இருக்குண்ணா’,ன்னான் ஒரு பையன்.

‘நான் சொல்லிக்கிறேன் டா’ன்னு சொல்லிட்டு ,’மாஸ்டர் ரெண்டு எக் ரைஸ் ஒன் பை டூ’ன்னு சவுண்டு குடுத்தார். கொஞ்சமாச்சும் மனிதாபிமானம் இருக்கேன்னு நான் சிரிச்சுக்கிட்டேன்.

அப்போ என்னோட வலது பக்கத்துல இருந்த டேபிள் காலியானிச்சு. அங்க ஒரு பையனும் பொண்ணும் வந்து உக்காந்தாங்க.

பொண்ணு அழுதிருந்துச்சு. அந்த பையன் முகத்துல ஒரே கோபம்.

அந்த பொண்ணு குனிஞ்சுக்கிட்டே இருந்துச்சு. அவன் ‘ ஹே என்ன பாரு டி. ..............’-ன்னு கெட்ட வார்த்தைல திட்டினான். அவ பாக்கல. வேற யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்ல.

எனக்கு சிக்கன் ரைஸ் வந்துடுச்சு. நான் சாப்பிட ஆரம்பிச்சேன்.

ஆர்டர் எடுக்கற அண்ணன் பக்கத்து டேபிள்ல இருக்கற பையன்கிட்ட வந்து ஆர்டர் கேட்டாரு.

‘இருண்ணா இன்னொரு பையன் வரணும்’-ன்னான் அந்த பையன்.

அந்த பொண்ணு பையன் ரெண்டு பேருமே சின்ன பசங்க. ரெண்டு பேருக்கும் இருபது வயசு இருக்கும். அந்த ஆர்டர் அண்ணன் போயிட்டாரு.

இன்னொருத்தன் வந்தான். நேரா போயி பின்னாடி டேபிள்ல இருந்த மூணு பேர் டேபிள்ல உக்காந்தான். வரும்போது எனக்கு வலது பக்கம் இருக்க , அந்த பையன்கிட்ட கைய காமிச்சு ஏதோ செய்கை காட்டிட்டு வந்தான்.

என்னடா இவன் அவனுக்கு கை காமிச்சிட்டு இந்த பசங்ககூட வந்து உக்காருறானேன்னு நான் திரும்பி பாத்தேன்.

ஏதோ பொட்டலத்த எடுத்து அந்த டேபிள் மேல வெச்சான்.

அப்போ ஒரு பையன் மட்டும் என்னை திரும்பிப் பாத்தான்.

நான் என்பக்கம் திரும்பிக்கிட்டேன்.

அதுக்கப்பறம் அந்த நாலு பேரும் ஏதோ பேசிக்கிட்டாங்க. ரொம்ப கமுக்கமா பேசினானுங்க. நான் அதுக்கப்பறம் அவங்க பேசுறத கண்டுக்கல. நாலாவதா வந்த பையன்மட்டும் எழுந்து வந்து எனக்கு வலது பக்கம் இருக்க டேபிள்ல உக்காந்தான். அந்த பொண்ணுகூட வந்த பையன் கிளம்பிட்டான்.

எனக்கு ஒண்ணுமே புரியல.

அந்த பையன் பேச ஆரம்பிச்சான். அவன் போட்டிருந்த ஜீன் பேன்ட் , டீ ஷர்ட் எல்லாம் அவன கொஞ்சம் டீசன்ட்டா காட்டினிச்சு.

‘உனக்காக அவன் எவ்வளோ பண்ணிருக்கான். நீ அதெல்லாம் யோசிச்சியா?’

‘இல்ல ராகுல். அவன் சரியில்ல. எனக்கு தெரிஞ்சே அவன் நெறைய தப்பு பண்றான்.எல்லா நாளுமே குடிக்கிறான். அவன் சேர்க்கையும் ஒன்னும் சரி கிடையாது’

‘என் கூட சேருறத சொல்றியா’

‘சேச்சே.. நான் உன்ன சொல்லல. அவன் குடிச்சுட்டு பேசினா என் அப்பாவ வெட்டிட்டு என்ன கல்யாணம் பண்ணுவேன்னு பேசுறான். நல்லா இருந்தா உங்க அப்பா அம்மாவெல்லாம் நம்ம நல்லா பாத்துப்போம்னு பேசுறான். அவன நம்ப முடியல’

‘உன் விஷயத்துல அவன் ரொம்ப நல்லவன். அவன் குடிப்பான்னு தெரிஞ்சுதான அவன லவ் பண்ணின?’ன்னு கேட்டான்.

‘ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது. அன்னிக்கு யாரோ தெரு பையன் பிரச்சனைக்காக யாரையோ அடிச்சு போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டு வந்திருக்கான். என்னால இதுக்கும் மேல பயந்து பயந்து இருக்க முடியாது. எனக்கு இது ஒத்து வராது’

எனக்கு பின்னாடி இருந்த பசங்களுக்கு எக் ரைஸ் வந்துச்சு.

‘ஹே என்னாடி ஓவரா பெனாத்துற. தெரிஞ்சே லவ் பண்ணுவீங்க. அப்பறம் கழட்டிவிடுவீங்களா? ................. உன்னயெல்லாம் எங்கயாச்சு கூட்டிட்டு போயி எதா பண்ணி போடி .......ன்னு அனுப்பிருக்கணும்’

‘பாத்து பேசு ராகுல்’, கோபமா கத்தினா அந்த பொண்ணு.

ஓனர் , ‘ என்னப்பா பிரச்சன அங்க? என்னம்மா ஆச்சு’ன்னு அந்த டேபிள் பக்கத்துல வந்தார்.

‘ஒன்னுல்ல சார். சும்மாதான் பேசிட்டிருக்கோம்’ன்னு சொன்னா அந்த பொண்ணு.

‘ஏன் ம்மா அழற. இந்த பையன் ஏதாவது பிரெச்சன பண்றானா சொல்லு’ன்னாரு ஓனர்.

‘இல்ல சார். நீங்க போங்க. சும்மாதான் பேசிட்டிருக்கோம்’,ன்னு சொன்னா அந்த பொண்ணு மறுபடியும்.

‘என்னவோ’,ன்னு ஓனர் போயிட்டார்.

அந்த பையன் எதுமே பேசல ஓனர் போகறவரைக்கும். மறுபடி ஆரம்பிச்சான். ‘ ஹே பதில் பேசு டி ...... . எல்லாம் தெரிஞ்சு லவ் பண்ணுவிங்க, பைக்ல கட்டிபிடிச்சுக்கிட்டு சுத்துவீங்க , நைட்டெல்லாம் போன் பேசுவீங்க , பத்தாததுக்கு சேந்து போட்டோல்லாம் கூட எடுத்துப்பீங்க. ஆனா கல்யாணம் பண்ணிக்கமட்டும் மாட்டீங்க’

‘எல்லாம் கரக்ட்தான். ஆனா நான் என்னன்னு போயி என் அப்பாக்கிட்ட சொல்லுவேன். அவன அதே போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல வெச்சு என் அப்பா பாத்திருக்கார். நான் போயி இவன தான் லவ் பண்றேன்னு சொன்னா செருப்பால அடிப்பாரு.என் பின்னாடி சுத்தி உன் பிரெண்ட்டுக்கு வக்காலத்து வாங்கறத நிறுத்து முதல்ல’-ன்னு மறுபடி கத்தினா அந்த பொண்ணு. பின்னாடி இருந்த பசங்க சாப்புடல. எழுந்து வந்து அந்த பொண்ணு இருந்த டேபிளுக்கு கொஞ்சம் முன்னாடி வாசல்கிட்ட போயி நின்னாங்க.

‘நீயெல்லாம் பேசிட்டே இருந்தா உன் வேலைய காட்டிட்டேதான் இருப்ப’ன்னு சொல்லிட்டே அந்த பையன் எழுந்து அந்த மூணு பேர் கூட போயி நின்னான்.

‘ஏய்’-ன்னு சவுண்டு குடுத்தான்.

அந்த பொண்ணு நிமிர்ந்து பாத்தா. அந்த மூணு பேருல ஒரு பையன் அந்த பேப்பர் பொட்டலத்த அந்த பொண்ணு மூஞ்சுல அடிச்சுட்டு ஓடினான். எல்லாரும் ஓடினானுங்க.

அது ஒடைஞ்சு சிதறி அதுல ஒரு பீஸ் நான் சாப்பிட்டுட்டு இருந்த என் சாப்பாடுல வந்து விழுந்துது. என்னன்னு யோசிக்க முடியல. திரும்பி அந்த பொண்ணு மூஞ்ச பாத்தா தோசை கல்லுல தண்ணி ஊத்தின மாதிரி பொசுங்குது.

ஆசிட்.
ஆசிட் முட்டை.

ச்ச. அந்த பொண்ணு உயிர விட்டு கத்துறா.

அந்த நாய்ங்க ஓடிட்டானுங்க. அந்த பொண்ணு அலறிக்கிட்டே முகத்துல கை வைக்க முடியாம டேபிள்ல இருந்து எழுந்து பொத்துன்னு கீழ விழுந்தா.

ஓனர் ஓடிவராரு. நான் பதறிப் போயி எழுந்து ஒரு மூளைக்கு போயி நிக்குறேன். அந்த பொண்ணு மூஞ்சுல டேபிள் தொடைச்ச பையன் தண்ணிய எடுத்து வந்து ஜார் ஜாரா ஊத்துறான்.

ஓனர் கத்துறாரு. ‘யார்னா போயி போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து கான்ஸ்டபிள் யாராச்சும் கூட்டிட்டு வாங்களேன்’ நூத்தி எட்டுக்கு போன் பண்ணி சொன்னேன் நான். ஆர்டர் எடுத்த அண்ணன் அதுல காணோம்.

ஒருத்தர் ஓடிப்போயி ஒரு போலீஸ்ஸ அழைச்சுட்டு வந்தாரு.

இதுல கொடுமை என்னன்னா அந்த பொண்ணு மூஞ்சுல ஆசிட் ஊத்துனதுல இருந்து ஒருத்தன் வீடியோ எடுத்துட்டு இருந்தான்.

என்ன கேவலமான மனுஷங்க இல்ல.

எனக்கு டவுட் எல்லாம் அந்த ஆர்டர் எடுத்தவனும் அவனுங்க கூட்டாளியாங்கறதுதான்.

கான்ஸ்டபிள் ஷட்டற மூட சொல்லிட்டாரு.

‘யாரையும் உள்ள அனுப்பாதீங்க. யாரையும் வெளில போக விடாதீங்க’ ன்னாரு போலீஸ்.

அதுக்குள்ள அந்த ஆர்டர் எடுத்தவன் வந்தான். அவன் புடிச்சுட்டு வந்தது அந்த நாலாவதா வந்த பையன.

‘இவன்தான் சார் அந்த பொட்டலம் கொண்டு வந்தவன்’ன்னாரு ஆர்டர் எடுத்த அண்ணன்.

நெஜம்மா அவர் மேல ஒரு மரியாதையே வந்துடுச்சு.

அடின்னா அடி சம்ம்ம்ம்ம அடி அந்த பொட்டலம் கொண்டு வந்தவனுக்கு. அந்த பொண்ண தொடவோ , அவளுக்கு எதும் முதலுதவி பண்ணவோ யாரையும் விடல.

ஆம்புலன்ஸ் வந்துச்சு. அதுக்குள்ள அந்த பொண்ணு வெச்சிருந்த பேக்ல ஆராய்ஞ்சு அங்க இங்கன்னு கால் பண்ணி அந்த பொண்ணு வீட்டுக்கு சொல்லிட்டாரு போலீஸ்.

அந்த பொண்ணுகூட என்னை ஆம்புலன்ஸ்ல ஏறி போக சொன்னாங்க. அதுக்கு முன்னாடி இன்னொரு போலீஸ் வந்தாரு. என்கிட்ட எல்லா டீட்டெயில்ஸ்சும் வாங்கிக்கிட்டாரு. என்னோட பைக் சாவியையும் சேர்த்து வாங்கிட்டாரு.

எனக்கு பதறுது.

நான் ஆம்புலன்ஸ்ல ஏறி போயிட்டே இருந்தேன்.

அந்த பொண்ணு மூஞ்ச பாக்குறப்போ எனக்கு அழுகையா வந்துச்சு.

அந்த பொண்ணுக்கு உயிர் இல்லன்னு மட்டும் என்னால நிச்சயமா சொல்ல முடியும்.

செத்துட்டா.

ஆனா ஹாஸ்பிட்டல் போயிட்டிருக்கோம்.

அழ ஆரம்பிச்சுட்டேன்.

ஹாஸ்ப்பிட்டல் போயி அந்த பொண்ண சேத்துட்டு ‘அந்த பொண்ணு செத்துடுச்சு’ன்னு என் காதுல விழறதுக்கு முன்னாடியே நான் அங்க இருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன்.

என் வாட்ச்ச பாக்குறப்போ மணி 5.30.

பக் பக்குன்னு அடிச்சுக்குது மனசு.

பைக் சாவி எடுத்துக்கிட்டு மறுபடி அந்த ஹோட்டல் இருக்கற எடத்துக்கு போனேன். அந்த ஹோட்டல் இருந்த எடத்துல ஒரு டீக்கடை இருந்துச்சு.

பத்திலாம் கொழுத்தி வெச்சு ஏதோ சாமி பாட்டெல்லாம் ஓடிட்டு இருந்துச்சு.

ஒரு டீ போடசொல்லி வாங்கிட்டு வந்து அந்த கடை பக்கத்துல இருக்கற ஒரு மெடிக்கல் ஷாப் வாசல்ல உக்காந்தேன்.

கனவுல வந்ததெல்லாம் மறுபடி மறுபடி என் மனசுக்குள்ளயே சுத்திட்டு இருந்துச்சு.

அந்த மெடிக்கல் ஷாப் வாசல்ல ஒரு தூண்ல ஒரு விளம்பரம் ஒட்டி இருந்துச்சு , ‘கெட்ட கனவுகளால அவதி படுறீங்களா? கவலைய விடுங்க’ன்னு.

‘அட போங்க டா’ன்னு சிரிச்சுக்கிட்டே டீ குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தேன்.

வந்ததும் ஒரு நெனப்பு மனசெல்லாம் ஓடிட்டே இருந்துச்சு.

‘கனவே ஆனாலும் குடி எத்தன பேர் வாழ்க்கைய கெடுக்குது, சின்ன பசங்க கையில கெடைக்கிற மாதிரி ஆசிட் கிடைக்குது, ஆர்வக் கோளாறுல பொண்ணுங்க பசங்களுக்கும் பசங்க பொண்ணுங்களுக்கும் ரொம்பவேதான் இடம் குடுத்துடுறாங்க, ரெண்டாயிரம் ரூபாயில இருந்து எல்லா மொபைல் போன்லயும் கேமரா இருக்கறதுனால இன்னைக்கு போட்டோ எடுத்து மிரட்டுறது ஒரு தொழிலா போச்சு, யார நம்புறது யார நம்பகூடாதுன்னே தெரியல, நல்லா ஆள் நடமாட்டம் இருக்க இடத்துலதான் பெரிய தப்பு எல்லாமே நடக்குது. இதுக்கெல்லாம் முடிவே இல்லையா’ ன்னு யோசிச்சிட்டிருந்தேன்.

தூக்கம் வந்துடுச்சு.

-மனோபாரதி

#Credit: https://www.facebook.com/ezhuthupizhai/photos/a.1387774244853803.1073741827.1380157772282117/1629094684055090/?type=3&theater

Thursday, 15 September 2016

சின்ன தாய் அவள்...சில நேரத்துல ஏன் அம்மா எதுக்கெடுத்தாலும் பயந்து பயந்து இப்டி கவல பட்டுக்குறாங்கன்னு தோணும். அதுக்கெல்லாம் அனுபவமிக்க அப்பா அழகா ஒரு பதில் வெச்சிருப்பாரு.

“அவ வீட்ட விட்டு வெளில எங்கயும் போகாம இருக்கால்ல அதான் டா”ன்னு.

அம்மாக்கு கோயில் தெரியும், மார்கெட் தெரியும், தன் புருஷன் தெரியும், என்னைத் தெரியும். இவ்ளோதான் அவங்க.

அப்பா Typically அப்பா. ஹி காட் வி.ஆர்.எஸ். அப்புறம் அந்த பணத்துல சென்னைல ஒரு வீடு வாங்கிக்கிட்டு “நாங்களும் உன் கூடவே வந்தடறோம்ப்பா”ன்னு இங்க வந்துட்டாங்க. நான் final year ஸ்டூடென்ட். சில பேர் படிப்புல அந்த அளவு இஷ்டம் இல்லனாக்கூட அம்மா அப்பாக்காக நல்லா படிச்சு நல்ல Rank வாங்குவாங்க இல்லையா? நான் அந்த Type.

Placements நடந்துட்டிருந்த சமயம். அம்மா வழக்கத்த விட நெறைய விரதம் இருக்க ஆரம்பிச்சாங்க. எனக்கு சாமி மேல அவ்ளோ இஷ்டம் கெடயாது. அப்பா மாதிரியே. ஆனா அம்மாவோட நம்பிக்கைய மோசம் பண்ணமாட்டோம்.

உண்மையா ஒத்துக்கணும்ன்னா ஒரு தனிப்பட்ட மனுஷனோட தீர்க்கமான நம்பிக்கைய சிதைக்கிற அளவு எனக்கு ஷக்தி இருந்தாலும் அதுக்கு மாற்று நம்பிக்கை குடுக்க முடிஞ்சா மட்டும் தான் நான் அத செய்வேன். இல்லன்னா விட்டிருவேன். தேவ இல்லாம அந்த நம்பிக்கை மேல விளையாட மாட்டேன்.

பேச்சு திறமைய வெச்சோ அறிவ வெச்சோ ரொம்ப Scientifical-ஆ Practical-ஆ பேசி அம்மாவ என்னால மாத்திட முடியும்.ஆனா அவங்களுக்கு வேற நம்பிக்கைய என்னால தர முடியாது.

நான் அண்ணா யுனிவர்சிட்டில படிச்சேன். ரொம்ப பெரிய கம்பனீஸ் பிளேஸ்மென்ட்ஸ்க்கு வருவாங்க. அம்மாக்கு என் ஸ்கூல் கதை காலேஜ் கதை கேக்க அவ்ளோ பிடிக்கும். நானும் ஒரு ஃப்ரென்ட் மாதிரி எல்லாத்தையும் அம்மாக்கிட்ட சொல்லுவேன்.

ஐக்ரியேட்டிவ் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ்(iCreative Software Solutionஸ்) ரெக்ரூட் பண்ண வராங்கன்னு நோட்டீஸ் போர்டுல போட்டிருந்துச்சு. ஆனா என்னோட ஃபேவரைட் கம்பெனி ஒன்னு இருந்துச்சு அதும் போட்டிருந்தாங்க. சோ.. நான் அம்மாக்கிட்ட சொன்னேன் “ம்மா. இந்த கம்பெனி நான் அட்டென்ட் பண்ணலம்மா. எனக்கு இத விட அடுத்து வரப் போற கம்பெனில தான் ம்மா இண்ட்ரெஸ்ட்ன்னு.”

அம்மா சொன்னாங்க “நீ இதும் அட்டென்ட் பண்ணு. அதும் அட்டென்ட் பண்ணு”ன்னு.

“இல்லம்மா. இந்த கம்பெனில நான் பிளேஸ் ஆயிட்டா எனக்கு அடுத்த ஆப்பர்ச்சூனிட்டி கெடைக்காது. உனக்கு புரியலம்மா. நான் கண்டிப்பா என் ஃபேவரைட் கம்பனில வேலைக்கு போவேன்ம்மா”

“ஆமா ப்பா. எனக்கு புரில.உனக்கு என்ன தோனுதோ செய்ப்பா. flaskல பால் வெச்சுருக்கேன். குடிச்சிட்டு படி” அம்மா கோச்சுக்கிட்டாங்களோன்னு இருந்துச்சு. சோ. நான் ஐக்ரியேட்டிவ் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் அட்டென்ட் பண்ணலாம்ன்னு முடிவு செஞ்சேன். லாஸ்ட் ரவுண்டு வரைக்கும் போய்ட்டா கூட வேணாம்ன்னு சொல்லிட்டு வந்துரலாம். நெக்ஸ்ட் கம்பெனில பாத்துக்கலாம்ன்னு இருந்துச்சு.

நான் டே ஸ்காலர்.

கொஞ்ச நாள் Friends கூட ஹாஸ்டல்ல தங்கினேன். அம்மாக்கும் நான் க்ளியர் பண்ணினா போதும்ன்னு இருந்துச்சு. அப்பா ஒரு நாள் கேண்டீன் வரைக்கும் வந்து ஃப்ரூட்ஸ்லாம் தந்து பாத்துட்டு போனார்.

iCSS வந்தாங்க.

Aptitude க்ளியர் ஆச்சு. 2nd ரவுண்டு க்ளியர் ஆச்சு. அம்மாக்கு ஃபோன் பண்ணினேன். ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.

எங்கம்மா இருக்கீங்கன்னு கேட்டேன். அப்பாவும் நானும் திருவான்மியூர் மருந்தீஷ்வர் கோயிலுக்கு வந்திருக்கோம்ன்னு சொன்னாங்க. நான் பேசிட்டு வெச்சிட்டேன்.

அடுத்த நாள் டெக் அண்ட் ஹெச்.ஆர். டெக்லயே வெளில வந்திரணும். ஹெச்.ஆர் போச்சுன்னா டெப்பனைட்டா ஆப்பர் கன்பார்ம் ஆயிடும். நெனச்ச மாதிரி டெக்ல சரியா பண்ணாம வெளில வந்துட்டேன். அம்மாவ எப்படியாவது கன்வின்ஸ் பண்ணணும். ஹாஸ்டல்ல தங்கி இருந்த நாளெல்லாம் நான் என் ஃபேவரைட் கம்பனிக்காக தான் ப்ரிப்பேர் பண்ணிருந்தேன்.

அம்மாக்கிட்ட iCSS கெடச்சிடும்ன்னு தைரியம் சொன்னேன். இன் ஃபேக்ட் பொய் சொன்னேன். வீட்டுக்கு வர சொன்னாங்க. எனக்கும் அம்மாவ பாத்தா நல்லாருக்கும் போல இருந்துச்சு. ஏதோ ஒன்னு உறுத்துனிச்சு. சரின்னு கெளம்பிட்டேன்.

திருவான்மியூர். 
ஏதோ சென்டிமென்ட் இந்த ஏரியா மேல. ஆர்.டி.ஓ சிக்னல் லெப்ட் எடுத்து திரும்பறப்போவே பீச் காத்து கைய பிடிச்சு கூட்டிட்டு போதும்.

வீடு.
காலிங் பெல் அடிச்சேன். வழக்கமா நான் அப்பா எங்கயாச்சும் வெளில போயிட்டு வந்தா அம்மா தான் வந்து கதவ திறப்பாங்க. சிரிச்ச முகமா, கதவு திறந்தோன கையில உள்ள பேக்லாம் வாங்கிக்கிட்டு, இம்மிடியேட்டா சாப்புட எதாவது ரெடி பண்ணுவாங்க. அன்னைக்கு வீடு தாழ் போடாம இருந்துச்சு. அப்பா கூட வந்து டோர் ஒப்பென் பண்ணல.

வாப்பான்னு வாய்ஸ் மட்டும் தான் கேட்டுச்சு. உள்ள போனேன். அப்பா அம்மாக்கு கால் அமுக்கிவிட்டுட்டிருந்தார்.

போய் அம்மா பக்கத்துல உக்காந்தேன். என்னம்மா ஆச்சு.

“ஒன்னும் இல்ல கண்ணா”

அப்பா ஏதோ சொல்ல வந்தாரு. அம்மா, அப்பா கைய அழுத்தி பிடிச்சாங்க.

“ம்மா சொல்ல போறியா இல்லையா ம்மா” “ப்பா எதும் சஸ்பென்ஸ் வெக்காதிங்க. எனக்கே ஒரு மாதிரி இருக்குன்னு தான் வந்தேன். ப்ளீஸ் ப்பா”

“அம்மா உனக்கு வேலை கெடைக்கனும்ன்னு நேத்து மருந்தீஷ்வர் கோயில முட்டிக்கால் போட்டு நடந்து வந்திருக்கா. வலியா இருக்காம். அதான் வாலினி போட்டு தேச்சுவிட்டுருக்கேன். சரி ஆயிடும் டா”

“ம்மா ஏம்மா நீ இப்புடி இருக்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். ஏன் நீ உன்ன இப்படி வருத்திக்கிற?” பேச்ச மாத்தினாங்க.

“சரி சொல்லு எப்படி போச்சு உனக்கு. ஈசியா feel பண்ணினயா.” “எனக்கு ரொம்ப டையர்ட்டா இருக்கு. நீ ரெஸ்ட் எடும்மா. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்” “ஏங்க அவனுக்கு கொஞ்சம் சாப்பாடு மட்டும் போட்டு கொண்டு போய் குடுங்களேன். இல்லன்னா ஒழுங்கா சாப்புடமாட்டான்” 

“சரிம்மா. நீ சாஞ்சி படுத்துக்கோ. நான் பாத்துக்கறேன்.” – இது அப்பா.

நான் என் ரூம்குள்ள போனா எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது. ட்ரெஸ் மாத்திட்டு பாத்ரூம்ல போய் கதறி கதறி அழுதேன். கிளியர் பண்ணி தொலைச்சிருக்கலாமோன்னு தோனுச்சு. ஏன் அம்மா இப்புடி இருக்காங்க. இது இல்லன்னா வேற கம்பனியே இல்லையா. கடவுள் வருத்திக்கிட்டா தான் கருணை காட்டுவானா... இது மாதிரி பழக்கமெல்லாம் அம்மாக்கு எப்புடி வந்துச்சு... அப்போ என் மேல நம்பிக்கை இல்லையான்னு என்னென்னவோ தோனுச்சு.

அப்பா கதவ தட்டினாரு. போய் சாப்டுட்டு வந்து தூங்கிட்டேன்.

தூங்கி எழுந்து ஃபோன் எடுத்து பாத்தா ஃப்ரெண்ட் மெசேஜ் அனுப்பிருந்தான். நான் எய்ம் பண்ணின கம்பனி வரல. ரிசெஷன்-னால பிளேஸ்மென்ட் ஆபீஸ்ல நெறைய கம்பனீஸ் வித்ட்ரா(Withdraw) வாங்கிட்டாங்கன்னு அனுப்பிருந்தான்.

அவன் தான் பிளேஸ்மென்ட் ரெப்ரசென்டேட்டிவ். எனக்கு செருப்ப கழட்டி என்னையே அடிச்சுக்கலாம்ன்னு இருந்துச்சு.

போய் அம்மா அப்பா ரூம பாத்தேன். ரெண்டு பேரும் தூங்கிட்டிருந்தாங்க. எனக்கு எப்புடி நான் க்ளியர் பண்ணலன்னு சொல்றது, சரி அவங்களே அடுத்த கம்பனி நீ எய்ம் பண்ணின கம்பனி தான பாத்துக்கலாம்ன்னு சொன்னா கூட எப்படி அந்த கம்பெனி வரலம்மான்னு சொல்றதுன்னு ஒரே கொழப்பமா இருந்துச்சு.

பக்கு பக்குன்னு அடிச்சிக்குது. நான் கதவ மெதுவா சாத்துறப்போ லைட்டா சவுண்ட் வந்துடுச்சு. அம்மா எழுந்துக்கிட்டாங்க.

“என்னப்பா. ரிசல்ட் சொல்லிட்டாங்களா?” “இல்லம்மா. நாளைக்கு தான் சொல்லுவாங்க” “டீ எதா போட்டுத் தரவா?” “நீ தூங்கு மா. நான் கொஞ்சம் வெளில போய்ட்டு வரேன்” “ஹ்ம்ம்ம்”

நான் வெளில வந்து உக்காந்துட்டிருந்தேன். என் அப்பார்ட்மென்ட்லயே தான் என் ஸ்கூல் ஃப்ரெண்ட் ப்ரீத்தியும் இருக்கா. என்ன நேரமோ அது கரெக்டா அவ வந்தா.

“ஹாய் டா” “ஹாய் ப்ரீத்தி” “என்னாச்சு. வழக்கமா வெளிலயே பாக்க முடியாது உன்ன. இங்க வந்து உக்காந்துட்டிருக்க? எனி ப்ராப்ளம்?”

எல்லாக் கதையும் அவக்கிட்ட சொல்லி முடிச்சேன். அவ ஒன்னு சொன்னா. “நீ யூஷுவலா ஒன்னு சொல்லுவியே நான் யாரு நம்பிக்கையையும் கெடுக்க மாட்டேன். அப்டி இப்டின்னு. அவங்க இந்த மாதிரி வருத்திக்கிட்டது எல்லாம் நீ இந்த கம்பனிக்குத்தான் வேலைக்கு போகனும்கறதுக்காக இல்ல. நல்ல வேலைக்கு போகனும்கறதுக்காகதான். எல்லா கம்பனியும் ஒன்னும் வித்டிரா பண்ணிடலையே. இருக்க கம்பனீஸ்ல எது பெஸ்ட்டுன்னு பாத்து பிளேஸ் ஆகு முதல்ல. அம்மா அப்பா புரிஞ்சிக்காதவங்க இல்ல. வேல கெடச்ச பின்னாடி இதான்ம்மா என் ட்ரீம்ன்னு சொல்லி ஏதாவது பேசி அவங்களுக்கு புரிய வெச்சிடு. ஒரு நம்பிக்கைக்கு இன்னொரு நம்பிக்கை. சிம்பிள்”

அவ பேசுனது கரெக்டான்னுலாம் தெரியாது. இல்ல எப்பயும் போல எதாச்சு சொல்லணும்ன்னு சொல்றாளான்னும் தெரியல. ஆனா கொஞ்சம் வெளி ஆள்கிட்ட பேசினது கொஞ்சம் ஒகேவா இருந்துச்சு.

காலேஜ் கெளம்பி போனேன். "Gold Man Sachs" ன்னு ஒரு கம்பெனி 6 days கழிச்சு வராங்கன்னு போட்டிருந்துச்சு. ரெடி ஆயிட்டேன்.

பிளேஸ்மென்ட் ஆபீஸ் எலெக்ஷன் ரிசல்ட்ஸ்க்காக லீவ்ன்னு இன்னொரு பொய் சொன்னேன்.அம்மா அதையும் நம்பினாங்க. அப்பாக்கு நல்லா தெரிஞ்சிருக்கும் நான் பொய் தான் பேசறேன்னு. அவரு காட்டிக்கல. பொதுவா தேவ இல்லாத டிடெக்டிவ் வேலையெல்லாம் செய்ய மாட்டாரு அப்பா.

கம்பெனி கிளியர் ஆச்சு. ஆறுதலா இருந்துச்சு எனக்கே. அம்மா அப்பாக்கூட மருந்தீஷ்வர் கோயிலுக்கு போயிருந்தேன்.

ரம்மியமா இருந்துச்சு. அம்மாக்கும் இப்ப கொஞ்சம் கால் பரவால்ல. திடிர்னு ஒரு குரல்.

“என்ன சார். என்கிட்ட கிளியர் ஆகாததெல்லாம் சொல்லுவிங்க. கிளியர் ஆனத ஒரு வரி எஸ்.எம்.எஸ் கூட அனுப்ப முடியாதா உங்களால?” ப்ரீத்தி.

அம்மா சிரிச்சாங்க. “இந்தாம்மா பிரசாதம் எடுத்துக்கோ. நான் வருத்தப்படுவேன்னு சொல்லலம்மா அவன். மத்தபடி அவன் சொல்லி தான் தெரியனுமா என்ன? புள்ளைங்க அசைவ வெச்சே நமக்கு புரிஞ்சிடாதா?”

முழி பிதுங்கிருச்சு எனக்கு.

அப்ப எல்லாமே தெரியுமா அம்மாக்குன்னு. எனக்கென்னவோ அந்த கோயில்ல இருந்த அம்மனும் அம்மாவும் ஒன்னு போலவே தெரிஞ்சிது. ரெண்டு பேருக்கும் நான் சொல்லி தான் தெரிய வேண்டியதில்ல போல.

லைட்டா கடவுள் நம்பிக்கை வந்துடுச்சு. அம்மா மேல. அம்மா – எ ஜீனியஸ்.

Friday, 9 September 2016

ஒரு கைதியின் புத்திசாலித்தனம் 😅😅

😢😢😢😢😢😢😢😢😢    
புழல் மத்திய சிறையில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர். இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது.


😢 முதல் கைதியின் ஆசை:
நல்ல பெண்,நல்ல சாப்பாடு ,நல்ல மது , MGR சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும். என்றான் , அவனது மூன்று ஆசைகளும்,..... நிறைவேற்றப்பட்டன.

😢இரண்டாவது கைதியின் ஆசைகள் ;
நல்ல பெண்,நல்ல உணவு, காமராஜர் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.

😳 மூன்றாவது கைதி :
🍋 தனது முதல் ஆசையாக மாம்பழம் வேண்டும் என்று, கேட்டான். அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதகாலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஆறு மாதகாலத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசை என்ன என்று, கேட்டனர்.
🍒 செர்ரிப் பழம் என்று பதில் வந்தது. அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு, பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.
😳 இப்பொழுது ,.... மூன்றாவது , ஆசையாக அவன் சொன்னான்,''என் உடல் தற்போதைய முதல்வரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.என்று ,!!! ''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர், .. நீ ''என்ன சொல்கிறாய், ? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!..
''கைதி அமைதியாகச் சொன்னான்,''அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்.'
😅😅. புத்திசாலி எந்த தருணத்திலும் தன்னை காத்துக் கொள்கிறான்...
🙏
*நெருப்புடா*🔥

Friday, 2 September 2016

ஒரு குட்டி கதைஒரு அரசர் இருந்தார் , அவரிடம் 10 காட்டு நாய்கள் இருந்தது.
அவர் தவறுகள் செய்த எல்லா அமைச்சர்களையும் சித்திரவதை செய்து சாப்பிட அவற்றை பயன்படுத்தினார்.

மந்திரிகளில் ஒருவர் ஒரு முறை ஒரு தவறான கருத்து தெரிவித்தார், அது ராஜாவிற்கு  பிடிக்கவில்லை.  அதனால் அவர் அந்த அமைச்சரை அந்த நாய்களிடம்  தள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதற்கு அமைச்சர் கூறினார், "நான் 10 ஆண்டுகள் உங்களிடம் பணியாற்றினேன்,  நீங்கள் எனக்கு இதை செய்ய போகிறீர்கள்?
நீங்கள் என்னை அந்த நாய்களிடம்  தூக்கி போடும் முன்பாக எனக்கு 10 நாட்கள் அவகாசம் கொடுங்கள்! "

அரசர் ஒப்புதல் ...

முதல் நாள், அமைச்சர், நாய்களை கவனித்து கொண்டிருந்த காவலரிடம்  சென்று, "நான் நாய்களுக்கு பணியாற்ற விரும்புகிறேன்" என்று கூறினார்.

பாதுகாப்பாளர் குழப்பினார், ஆனால் அவர் ஒப்பு கொண்டார்.
எனவே அமைச்சர், நாய்களுக்கு உணவளித்தல், அவற்றை குளிப்பாட்டுதல், அவர்களை சுத்தம் செய்தல் என்று அவற்றுக்கு அணைத்து பணிவிடைகளும் செய்தார்.

10 நாட்கள் முடிவடைந்த போது, ராஜா அவரை தூக்கி அந்த நாய்களிடம் எறியுமாறு பணியாட்களுக்கு உத்தரவிட்டார்.

ஆனால் அவர் எறியப்பட்ட போது, அவர்கள் அனைவரும் நடந்ததை பார்த்து அதிர்ச்சியானார்கள். நாய்கள் அவரை கடித்து திண்பதற்கு பதிலாக அவரது பாதங்களை நக்கி தன் நன்றியை தெரிவித்து கொண்டன.

மன்னரும் இதை பார்த்து குழப்பி "நாய்களுக்கு என்ன நடந்தது!" என்று விசாரித்தார்.

மந்திரி கூறினார், "நான் நாய்களுக்கு 10 நாட்கள் சேவை செய்தேன்.. அவை என்னை மறக்க வில்லை.. நான் உங்களுக்கு 10 வருடங்கள் சேவை செய்தேன்... ஆனால் நீங்கள் என்னுடைய முதல் தவறுக்கு என்னை தண்டித்துவிட்டீர்கள்."

அரசர் தன் தவறை உணர்ந்து...

நாய்களுக்கு பதிலாக "ஓநாய்கள்" வாங்கினார்!