Saturday, 4 February 2017

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!

🌼கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை🌼

🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன், இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…

🌼ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.

🌼அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

🌼“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!”

🌼கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…

🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”

🌼“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.

🌼“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன்.

🌼அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது.

🌼ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.

🌼இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.

🌼“மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.

🌼ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது.

🌼அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.

🌼ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார்.

🌼“இத்தனை ஆண்டு கால‌த்‌தி‌ல் மூ‌ங்‌கி‌ல் விதை செத்துவிடவில்லை. தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது.

🌼பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.

🌼எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” எ‌ன்று சா‌ந்தமாக ப‌தில‌ளி‌த்தா‌ர்.

🌼மேலும் கடவுள் என்னிடம், 🌼“உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், 🌼நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன். 🌼மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. 🌼ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார்.

🌼“மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனா‌ல் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

🌼இறுதியாக, “உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்” 🌼நான் கேட்டேன், “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?”

🌼“மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.

🌼“எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்” என்று கேள்வி எழுப்பினேன் நான். “அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்” என்றார் அவர்.

🌼“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?” என்று வியந்தேன் நான்.

🌼“ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று கூறி மறைந்தார்.

🌼நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன்.

🌼மீண்டும் இந்த கதைக்கே திரும்பினேன்.

🌼ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.

🌼கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை.

🌼முந்திக்கொண்ட முதல் செங்கல் கோவிலின் அடித்தளத்தில் நின்றுவிடும் ! காத்திருந்த கடைசி செங்கல் தான் கலசம் தொடும் !

🌼சாதிக்க மிக மிக அவசியம் பொறுமை!

Wednesday, 14 December 2016

தாழ்வு மனப்பான்மையை போக்கும் மாணிக்க கல்!!!


தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார். அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்? என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான். கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார். 

அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான். 

அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூட்டை  கிழங்கு தருவதாக சொன்னான். 

நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான். 

மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார். 

குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான். அதற்கு கடவுள் சொன்னார், பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர் தான் சொன்னார். அதே போல் உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர், அதற்கெல்லாம் கவலைப்படாதே! உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே என்று கூறி மறைந்தார். 
  • கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே! 
  • தாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது! 
  • நம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் நமக்கு முதலில் வேண்டும்.
  • ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே! 
  • உங்களுக்கு நிகர் நீங்களே! 
  • யாரும் உங்களுக்கு இணை கிடையாது! 
  • காரண காரியமின்றி எதுவும் நடக்காது! 
  • உங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளையும் கடமைகளையும் முடிப்பதற்காகவே நீங்கள் இந்த பூவுலகிற்கு வந்துள்ளீர்கள்! 
  • தாழ்வு மனப்பான்மையை விடுத்து அவற்றில் கவனத்தை செலுத்தி அவற்றை செவ்வனே செய்து காட்டுங்கள்! 
  • விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை புரிந்து கொள்ளுங்கள்! 

வாழ்த்துகள்!

Tuesday, 29 November 2016

பெண்!!!அன்று அவளுக்கு அலுவலகம் முடிய கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நடு ராத்திரியில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாள். மனது ஒரு வித பயத்துடனே இருந்தது.

அப்போது சாலை ஓரத்தில் ஒரு ஆட்டோ நிற்பதை கண்டு அந்த ஆட்டோவை நோக்கி நடக்க தயாரானாள். அப்போது பின்னால் இருந்து ஒரு சத்தம்... இதயம் ஒரு நொடி நிற்க, திரும்பி பார்த்தால், தன்னுடைய மேனேஜர்! “ஹேய்! என்ன இங்க நிற்கிற! பயப்படாதே நான் உன்னை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். நீ என்னுடன் பணி புரியும் பெண்... நீ என் பொறுப்பு'' என்று சொல்லி ஆட்டோ எண்ணை குறித்துக்கொண்டு அந்த ஆட்டோவில் அனுப்பி வைத்தார். ஆட்டோ நகர்ந்தது... ஆட்டோ கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழ்ந்த சாலையில் பயணமானது.

ஆட்டோக்காரர் கேட்டார், ''ஏம்மா இவ்வளவு நேரமா வேலை செய்வீங்க'' என்று. ஒரு பதட்டத்தோடு, ''ஆம்...'' என்று சொல்ல இதயத்துடிப்பு அதிகமானது. தான் போக வேண்டிய இடம் நெருங்கியதும், ஆட்டோவை நிறுத்த சொன்னாள். ஆட்டோகாரர் உடனே, ''கொஞ்சம் இரும்மா... பயப்படாதே, அந்த தெரு முனையில் விடுறேன். என் ஆட்டோவில் வருகின்றாய், நீ என் பொறுப்பு'' என்று சொல்லி தெரு முனையில் இறக்கிவிட்டார்.

இரண்டு அடி கூட நடக்கவில்லை.... அதற்குள் ஒரு 45 வயது மதிக்கதக்க ஒருவர் வாயில் சிகரெட்டுடன் காட்சியளித்தார். இந்த முறை கிட்டத்தட்ட இதயம் முழுதாக நின்றுவிடும் போல் ஆக.... அவர் சட்டென சிகரெட்டை தூக்கி போட்டுவிட்டு, ''இங்க வாம்மா, நீ இவரோட பொண்ணு தான?, வா நான் உன்னை பாதுகாப்பாக கொண்டு போய் வீட்டில் விடுறேன்'' என்றார்.

கடைசிவரை அந்த பெண்ணுக்கு ஏதும் ஆகலை. ஆனால் இதை படிக்கும் போது ஒவ்வொரு முறையும் நம் இதயம் படபடத்தது. இது தான் நம் நாட்டில் பெண்களின் பாதுகாப்பின் நிலை என்பதை மறுக்க முடியாது. 'நம் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்பும் நம் பொறுப்பு' என ஒவ்வொரு மனிதரும் நினைக்க வேண்டும். சாலையில் தனிமையில் நடக்கும் ஒரு பெண் யாரோ ஒருவரின் மகளாக, அக்காவாக, தங்கையாக, அம்மாவாக, மனைவியாக, காதலியாக தானே வாழ்ந்து கொண்டு இருக்க முடியும்.

Monday, 28 November 2016

நெஞ்சே… நீ வாழ்க!“இந்த பெட்டிய நான்தான் கொண்டு போவன்..”
“இல்ல நான்தான்!”
“அப்பா எனக்குத்தான் தந்தவர். அம்மாஆ!” பிள்ளைகளின் பிடுங்குப்பாடுதான் அன்று நிர்மலனுக்கு சுப்ரபாதம். புன்னகையோடு புரண்டு படுத்தாலும், அவர்களின் சண்டை எதற்காய் என்று அறிந்து புன்னகைத்தான். ஊருக்குப் போகப் போகிறார்கள். இரவு ஃபிளைட். பிறகென்ன?
அவனுக்குள்ளும் அவர்களின் உற்சாகம் தொற்றிக்கொண்டது. சுவிஸ் வந்து ஒன்பது வருடங்களாகியிருந்தது. இப்போதுதான் நாட்டையும் சொந்த பந்தங்களையும் பார்க்கப்போகிறான். ஊர் எப்படி இருக்கும்? எல்லோரும் எப்படி இருப்பார்கள்? அவன் படித்த கல்லூரி? நண்பர்கள்? என்று ஓடிய நினைவுகள் தப்பியோட முயல, “அங்க அப்பா படுத்திருக்கிறார்.. கத்தாதிங்கோ..” என்ற மனைவியின் குரல் அதை தடுத்து நிறுத்தியது.

உஷா. அவனுடைய அன்புக்கினிய துணைவி. அவனது மனமறிந்து நடந்துகொள்வாள். இன்றுபோல!
இனியும் படுத்தால் சரியாக வராது என்று எழுந்து வெளியே சென்றான். ஹாலில் அவர்கள் ஊருக்கு கொண்டுபோகும் பெட்டிகள் தயார் நிலையில் இருந்தன. அதில் இருந்த ஒரு பெட்டிக்குத்தான் அவனது குழந்தைகளுக்குள் சண்டை உருவாகியிருந்தது.
தகப்பனைக் கண்டதும் பஞ்சாயத்துக்கு அவனிடம் வந்தனர். அவர்களை அவன் சமாளித்துக்கொண்டு இருக்கையிலேயே, “அப்பா.. எங்கட அம்மாவுக்கு என்ர இந்த பழைய போனைக் கொண்டே குடுக்கட்டா? வீட்டுல சும்மாதானே இருக்கு..” என்றபடி வந்தாள் உஷா.
அவன் சம்மதிக்க, சந்தோசத்தோடு எடுத்து வைத்தாள்.

“நகையெல்லாம் எல்லாருக்கும் எடுத்து வச்சாச்சா?” நினைவு வந்தவனாக கேட்டான்.
“லாக்கர்ல இருந்து எடுத்துக்கொண்டு வந்திட்டன். ஆனா, ஊருக்கு கொண்டு போகவேணுமே? களவு கிளவு போய்ட்டுது எண்டா.. அதுதான் யோசிக்கிறன்.” என்றாள் உஷா.

“அப்படி எல்லாம் நடக்காது. அப்படியே களவு போனாலும் வேற வாங்கலாம். ஆனா, அங்க ஊருல எல்லாரும் என்ர மனுசி பிள்ளைகளை பார்த்து மூக்கில விரலை வைக்கோணும். அப்படி இருக்கோணும் நீங்க மூண்டுபேரும்.” என்றான் ஒரு வேகத்தோடு.

கணவனை புதிராகப் பார்த்தாள் உஷா. அவனோ மீண்டும் குழந்தைகளோடு ஐக்கியமாகி இருந்தான். அன்பான கணவன். அவளுக்கு குறை என்று இதுவரை எதுவுமே இல்லை. அவன் காட்டும் அன்பிலாகட்டும், அக்கறையிலாகட்டும், காதலிலாகட்டும்.

அவர்களின் பாதுகாப்பை யோசிக்காமல் பகட்டை விரும்புகிறவனும் அல்ல. பின்னே..

எல்லோரும் முதன் முதலாக ஊருக்கு போவதால் மனைவி பிள்ளைகளை தான் நல்லபடியாக வாழ வைப்பதை காட்ட விரும்புகிறான் போலும். அதிலே தப்பில்லையே. அவன் அப்படித்தானே அவர்களை வைத்திருக்கிறான்.

மனம் நிறைய அவன் சொன்னபடியே அனைத்தையும் எடுத்து வைத்தாள். அவளுக்கும் அம்மா அப்பா தம்பி தங்கைகள் என்று எல்லோரையும் பார்க்கப் போகிறோம் என்கிற சந்தோசம்.
உற்சாகத்தோடு தயாராகினர். நிர்மலனுக்கும் மனதில் துள்ளல் தான். கூடவே ஒரு வேகமும்!
‘பார்! நல்லா பார்! நான் வாழும் வாழ்க்கையை பார். என் மனைவி பிள்ளைகளை பார். என் சந்தோசமான வாழ்க்கையை பார்’ என்று காட்டிவிடும் உத்வேகம்!

ஒருவழியாக கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையம் சென்றிறங்கி பெற்றவர்களை கண்டதும் ஆளாளுக்கு கட்டியணைத்து கண்ணீர் விட்டு சந்தோசத்தை பரிமாறிக்கொண்டனர்.
ஒருவரில் தெரிந்த மாற்றங்களை மற்றவர்கள் வியப்போடும் கேலியோடும் பேசிக்கொண்டனர். உற்சாகமாகவே பயணம் வன்னியை நோக்கி நகர்ந்தது.
விசாரிப்பு ஆரவாரங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்க அவரவர் அமர்ந்திருந்த சீட்டுகளிலேயே சாய்ந்துகொண்டனர். வீட்டாருக்கு இரவிரவாக முழித்திருந்து பயணித்த களைப்பு என்றால் நிர்மலன் குடும்பத்துக்கு நெடுந்தூரப் பயணம் செய்த களைப்பு.
எல்லோரும் மெல்ல மெல்ல உறங்க, நிர்மலன் மட்டும் விழித்திருந்தான். வன்னியை அடைந்து அவர்களின் சொந்த ஊரான வட்டக்கச்சியை வாகனம் நெருங்கவும் பிரதான சந்தியை ஆவலுடன் எட்டிப் பார்த்தான். விழிகள் அங்கிருந்த மாற்றங்களை வியப்போடு வேகமாக உள்வாங்கத் தொடங்கிற்று! சந்தியை கடந்து இருபக்கமும் வயல்காணிகள் நிறைந்த அவர்களின் வீட்டுக்குச் செல்லும் வீதிக்குள் வாகனம் நுழையவும் சுற்றுப்புறத்தை மறந்து வீதியை வெறித்தான்.
இதே வீதியில் எவ்வளவு வேகமாக சைக்கிளை மிதிப்பான். ஹாண்டிலை இறுக்கிப் பிடித்து முதுகை முன்னே சரித்து எதிர்காற்றுக்கு முகம் கொடுத்து அவன் மிதிக்கும் சைக்கிளுக்கு முன்னால் மோட்டார் வண்டியே தோற்றுவிடும். அவ்வளவு உத்வேகத்தை கொடுப்பது அவள் மீது அவன் கொண்ட ஆசை!
ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும் கடல் திடீரென சுனாமியாக மாறி சுழற்றி அடிப்பது போன்று அவன் மனதுக்குள் பெரும் கொந்தளிப்புடன் பழைய நினைவுகள் வெளிவந்தன.
காலையில் எழுந்ததும் குளித்து, கண்ணாடி முன் நின்று தங்கையின் ஃபெயார் அண்ட் லவ்லியை அவளுக்கு தெரியாமல் முகத்தில் அப்பி, பௌடரால் திருநீறு பூசி, சந்தனத்தை குலைத்து பெரிய பொட்டாக வைத்துக்கொண்டு சாமியே கும்பிடாமல் வேக வேகமாக அவன் போவது பள்ளிக்கூடத்துக்கு. படிக்கவல்ல! அவளை பார்க்க!

அவள் ஒன்றும் அவனுக்கு தெரியாதவள் அல்ல. ஒரே ஊர். ஒரே தெரு. சின்ன வயதிலிருந்தே நண்பர்கள் தான். பாடசாலையும் ஒன்றுதான். அவள் பெரியவள் ஆனதும் விழுந்த இடைவெளி மெல்ல மெல்ல நீண்டுகொண்டே போனதை இருவருமே பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஒரு நாள் அவளைக் கண்டான்! புதிதாக.. புத்தம் புதுப் பூவாக! அவனுக்காகவே பிரம்மனால் பிரத்யோகமாக படைக்கப்பட்ட அவனவளாக!

ஏதோ ஒரு நொடியில் அந்த மந்திரக்கோல் சுழலுமே.. இனி இவள்தான் உனக்கு காலம் முழுக்க என்று மனம் சொல்லுமே.. அந்த நொடி.. ஒரு மழைநாளில் அவனுக்குள் நிகழ்ந்தது.

குடையை கொண்டுவர மறந்துவிட்டாள் போலும். வேக வேகமாக நடந்துகொண்டிருந்தாள். மழைக்கு நனைந்துவிடாமலிருக்க அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவை எடுத்து தலையை சுற்றிப் போட்டிருந்தாள், முஸ்லிம் பெண்கள் அணிவது போல.

ரோட்டில் இருந்த சேற்றில் காலை வைத்துவிடாமலிருக்க, சேறில்லாத இடமாக பார்த்து காலை எட்டி எட்டி வைத்துக்கொண்டிருந்தவள், எதிரே சைக்கிள் வருவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்த அந்த நொடி.. சைக்கிளில் வந்துகொண்டிருந்த இவன் வீழ்ந்து போனான்! நிலத்திலல்ல! அவளின் ஆழ்கடல் போன்று விரிந்திருந்த அந்த மயக்கும் விழிகளுக்குள்!

தலையில் ஷால். நெற்றியில் பொட்டு. அவை இரண்டுக்குமான இடைவெளியில் அவள் கூந்தல் சுருள்கள் மழைத்துளிகளை தாங்கி நின்றன. கோயிலுக்கு போய் வந்திருப்பாள் போல, அவள் ஒட்டியிருந்த கறுப்பு பொட்டுக்கு மேலே சந்தனத்தையும் பட்டும் படாமல் குங்குமத்தையும் வைத்திருந்தாள். தலை சற்றே குனிந்து தரையை பார்த்திருக்க, விழிகளை மட்டும் உயர்த்தி இவன் சேற்றை அடித்துவிடுவானோ என்கிற அச்சத்துடன் அவள் பார்த்தது.. அந்த நிமிடத்தில் தான் அவன் தொலைந்தான்.

அவன் விரும்பித் தொலைந்த நொடி!

அதன் பிறகான நாட்கள் அந்த நொடியை சுற்றியே கடந்தது. ஒவ்வொரு நாட்களும் விடிவதே அவளை பார்ப்பதற்கு மட்டுமே என்றாகிப் போனது.

அந்த இடம் போற்றுதலுக்குரிய புனிதமாயிற்று!

இன்றோ அந்த இடத்தை கடந்தபோது வெறுப்பை உமிழ்ந்தன விழிகள்! அந்த நிகழ்வுகள் அனைத்தும் அவன் வாழ்வில் வராமலே இருந்திருக்கக் கூடாதா?

“அப்பா மானசிய பிடியுங்கோ.. ஆரனுக்கு பால் குடுக்க விடுறாள் இல்ல..” என்றபடி, மகளை தன்னிடம் நீட்டிய மனைவியின் குரலில் நினைவுகள் கலைந்து, மகளை வாங்கிக்கொண்டான்.

அதற்குள் அவர்களின் வீடும் வந்துவிட, இவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கவும் அயலவர் கூடவும் சரியாக இருந்தது. சந்தோசமாக அவர்களோடு ஐக்கியமாகிப் போனான் நிர்மலன்.

ஒரு கட்டத்துக்குமேல் அதுவும் முடியாமல் போனது. ஏதோ ஒன்று மனதை அரித்துக்கொண்டே இருந்தது. ஆவலோடு ஊருக்கு வந்தாயிற்று! ஆசையோடு அம்மாவின் கையால் உணவும் வாங்கி சாப்பிட்டாயிற்று! சிறுவயதில் அப்பாவின் அடிக்கு பயந்து ஏறி ஒழிந்துகொண்ட மாமரத்தின் அடியில் பாய் விரித்து படுத்தும் எழுந்தாயிற்று! செவ்விளநீர் மரத்தில் பிடுங்கிய இளநீரையும் குடித்தாயிற்று! சொந்தபந்தங்களை கண்டு ஆசைதீர பழங்கதை பேசி சிரித்துமாயிற்று! ஆனாலும் ஏனோ மனம் கிடந்து புளுங்கிக்கொண்டே இருந்தது. என்னதான் வேண்டுமாம்? ஒன்றுமே விளங்கவில்லை அவனுக்கு.

பழைய நினைவுகள் தான் வேண்டாம் வேண்டாம் என்றாலும் கேட்காமல் ஒன்றாக படையெடுத்து வந்து அவனை சராமாரியாக போட்டுத் தாக்கிக்கொண்டிருந்தன! அங்கிருந்த ஒவ்வொரு மரமும் செடியும் கொடியும் அவனது இறந்தகாலத்தை கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தியது.

அதுவும் அவன் வீட்டுக்கு முன்னால் பூத்துக் குலுங்கியபடி இப்போதும் நின்ற கொண்டல் மரம்.. பார்வை அங்கே விரைந்தது. ஒருகாலத்தில் அவனது தூதுப்புறா அதுதான்!

‘ஊப்ஸ்..’ காற்றை ஊதி நினைவுகளை விரட்ட முயன்றான். முடியவில்லை!

முதல் காதல். வாழ்வின் அழியா சித்திரம் தான் போலும். இன்றும் ரணமாக் கிடந்து கொதித்தது.

அதன் பிறகோ அவன் பார்வை அவள் மீது ஆர்வமாக படியத் தொடங்கிற்று! முதலில் அவள் உணரவேயில்லை. உணரத்தொடங்கியதும் சில நாட்கள் படபடப்போடு அவனிருந்த திசைக்கே வரவில்லை. தவிர்க்கமுடியாமல் சந்திக்க நேர்ந்தால் தயக்கத்துடன் தலையை குனிந்துகொண்டு ஓடிவிடுவாள். அவளின் தயக்கம் தான் அவனுக்கும் துணிச்சலைக் கொடுத்தது! அந்தத் துணிச்சலோடு அவளை வேண்டுமென்றே பார்ப்பான்!

அவளும் பிறகு பிறகு தோழியர் அறியாமல், அவனும் அறியாமல் அவனை கண்களால் ரசிக்கத் தொடங்கினாள். அதைக் கண்டுகொண்டதும் இவன் பட்ட பாடு என்ன, குதித்த குதி என்ன!

இன்று எள்ளி நகையாடியது அந்த நாட்கள் அவனைப் பார்த்து!

‘ச்சே! எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன்!’ அந்த நினைவுகளே கசந்து வழிந்தது!

அதுவரை அவன் விழிகளையே சந்திக்காதவள் அதன் பிறகோ மெல்ல தன் விழிகளை அவன் விழிகளோடு கலக்க முனைவாள். முடியாமல் தடுமாறித் தவித்து, சட்டென பார்வையை விலக்கிவிடுவாள். இமைகள் படபடக்க, கன்னங்கள் மெல்லச் சிவக்கும். இதழோரத்தில் சின்னப் புன்னகை ரகசியமாய் மலரும். அதெல்லாம் அவளிடமிருந்து கிடைத்த பச்சைக்கொடி.

அவனது ஒற்றை பார்வையையே தாங்கமுடியாமல் தடுமாறுகிறவளின் தவிப்பை அவன் ரசிப்பான். தான் படும்பாட்டை அவன் ரசிக்கிறான் என்பதை உணர்ந்து வெட்கத்தில் அவள் துடிப்பாள். விழிகள் அலைபாயும்!

அதுவே அவளுக்கும் அவனை பிடித்திருக்கிறது என்று உணர்த்திய ஜாடைகள்.

ஒவ்வொரு வெள்ளியும் அவள் கோவில் செல்வாள் என்பதையறிந்து அவனும் செல்வான். அன்று தன் கையிலிருந்த மிகுதி திருநீறு சந்தனம் குங்குமத்தை அவன் தூண் ஒன்றில் கொட்டியபோது அவள் எடுத்து தன் நெற்றியில் இட்டுக்கொண்டாள். உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது என்று அப்பட்டமாக அவனுக்கு மட்டுமே அவள் தெரிவித்த பதிலது!

எல்லோராலும் ‘நான் உன்னை காதிலிக்கிறேன். நீ என்னை காதலிக்கிறாயா?’ என்று கேட்டுவிட முடியாது. ‘ஆமாம் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்லிவிடவும் முடியாது.

இவைதான் கேள்விகளும் பதில்களும்!

அன்று உலகத்தையே கைக்குள் அடக்கிவிட்ட இறுமாப்பு அவனிடம்! எத்தனையோ சாம்ராஜ்யங்களை வென்ற சோழன் கூட அந்த துள்ளல் துள்ளியிருக்க மாட்டான்! அப்படியிருந்தது அவள் மனதை வென்றுவிட்ட போதை!

அதன் பிறகு இதழ்கள் பேசாத அத்தனை காதலையும் விழிகள் நான்கும் பேசிக்கொண்டன! நெடு நாட்களுக்கு விழிகளுக்கு இருந்த தைரியம் இதழ்களுக்கு வரவேயில்லை.

இரண்டாயிரத்து எட்டாம் வருடம் நாட்டுப்பிரச்சனை மெல்ல மெல்ல அதிகரிப்பதை உணர்ந்து, வீட்டில் அவனை சுவிசுக்கு அனுப்ப பெற்றவர்கள் தயாரானபோது, அவளைப் பிரியப்போகிறோம் என்கிற துயர் கொடுத்த துணிச்சலில்தான் அவளிடம் முதன் முதலாக அவன் கதைத்ததே!

ஒருநாள் மாலை அவர்கள் வீட்டுக்கு முன்னால் நின்ற கொண்டல் மரத்தில் அவள் பார்க்கும் வகையில் ஒரு துண்டை செருகிவிட்டு சென்றான் நிர்மலன். யாரும் பார்க்காத நேரம் பார்த்து அதை எடுத்துப் படித்தாள் அவள். அதில் எழுதியிருந்ததன் படி கோவிலுக்கு அவள் வந்து சேர்ந்தபோது மெல்லிய இருள் கவியத் தொடங்கியிருந்தது.

படபடப்பும் பயமுமாக அவனருகில் வந்து நின்றவளிடம், “சுவிசுக்கு போகப்போறன்..” என்று அவன் சொன்னதும், அதிர்ச்சியில் விரிந்த அவள் விழிகளிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டிற்று!

அந்தக் கண்ணீரை கண்டபோது எந்தளவு தூரத்துக்கு வலித்ததோ அந்தளவு தூரத்துக்கு நெஞ்சு நிறைந்து போனது. காதலியின் கடைக்கண் பார்வைக்கே தவமாய் தவமிருந்தவன் அவன். அந்தக் கண்களில் இருந்து கண்ணீர் அவனுக்காக வழிந்தால்?

நெஞ்சில் நிறைந்திருந்த நேசம் உந்த சட்டென்று அவளின் கன்னங்கள் இரண்டையும் தன் கைகளால் துடைத்துவிட்டான்.

“நீ இப்படி அழுதா நான் எப்படி போறது..?”

“நீங்க இல்லாம எப்படி.. நான் தனியா..” சிவந்திருந்த விழிகள் மீண்டும் கலங்க அவன் முகம் பார்த்து ஏக்கத்தோடு அவள் கேட்டபோது, காலம் காலமாய் காதலோடு வாழ்ந்துவிட்ட திருப்தியை அனுபவித்திருந்தான் நிர்மலன்.

ஒவ்வொரு நாட்களையும் வாழ்கிறோம் தான். ஆனால், சில நாட்கள் தான் நம் வாழ்க்கையாகிப் போகிறது. அந்த நாட்களில் தான் மொத்த வாழ்க்கையையுமே வாழ்ந்திருப்போம். அப்படித்தான் அவனும்! அன்றுதான் வாழ்ந்தான். அந்த நாள் தான் அவனது மிகுதி வாழ்க்கையாகவும் மாறிப்போனது!

“ஏன் தனியா.. போகேக்க எப்படியாவது ஒரு செல் வாங்கி தந்திட்டு போறன்.. ஒவ்வொரு நாளும் எடுப்பன். ஸ்கைப்ள கதைக்கலாம். சரியா..?” இதமாக சொன்னான்.

அவள் தெளியாத முகத்தோடு தலையசைக்க, “இவ்வளவு நாளும் கண்ணால பாத்துகொண்டு மட்டும் தானே இருந்தோம். இனி கதைக்கப் போறோமே. அத நினச்சுப்பார்.” என்றான் குறும்புச் சிரிப்போடு.

அப்போதுதான் அதுநாள் வரை அவர்களை தடுத்து நிறுத்தியிருந்த வெட்கத்தையும் கூச்சத்தையும் தடுமாற்றத்தையும் உடைத்துக்கொண்டு அவர்கள் இருவரும் பேசிக்கொள்கிறார்கள் என்பதே புலப்பட, வெட்கத்தோடு புன்னகைத்தாள் அவள். அவன் சொன்ன சேதி நெஞ்சை அழுத்திய பாரத்தில் அதை உணரத் தவறியிருந்தாள்.

“இப்போதைக்கு நல்லா படி.. எனக்கு அங்க விசா கிடைச்சதும் முதல் வேலையா உன்ன கூப்பிட்டுடுவன்.. அதால கவலைப்படாம இரு என்ன..!” என்றான் கனிவோடு.

சம்மதமாக தலையசைத்தாள். விழிகளில் கலக்கம் சூழ, நிமிர்ந்து அவனையே பார்த்து, “என்னை மறந்திட மாட்டிங்க தானே..” கேட்கையிலேயே கேவல் வெடித்தது. “பிறகு.. பிறகு நான் செத்திடுவன்..” என்றாள். அன்று துடித்துப்போனான் நிர்மலன்.

இன்று நெஞ்சு கொதித்தது அவனுக்கு. எப்படியெல்லாம் ஏமாந்திருக்கிறான். எவ்வளவு பெரிய பச்சோந்தி அவள்!

‘அவனை இளிச்சவாயனாக மாற்றியவள் மீது ஆத்திரமும் ஆவேசமும் பொங்கிற்று!’

இன்று காதலின் வலி அவனிடம் இல்லைதான். மருந்தாக வந்து மனக்காயத்தை ஆற்றியவள் அவன் மனைவி! அவனது காதலும் நேசமும் பாசமும் அவளிடம் மட்டும்தான்.

ஆனால், ஒரு ஏமாற்றுக்காரியை நம்பினேனே.. அவளிடம் ஏமாந்து போனேனே என்பதுதான் இன்னும் நெஞ்சில் நின்றது.

அன்று சற்றும் உணரவில்லையே! மகுடிக்கு மயங்கும் பாம்பாய் அவளிடம் மயங்கிக் கிடந்தானே! அந்தளவுக்கு சிறந்த நடிகை அவளா..? அல்லது மிகக் கேவலமான ஏமாளி அவனா?

ஆத்திரமும் ஆவேசமும் தான் வந்தது.

ஆனால் அன்றோ.. அவர்களின் காதல் செல்பேசி வழியாக ஆத்மார்த்தமாக வளர்ந்துகொண்டே இருந்தது. அப்படித்தான் அவன் நினைத்திருந்தான்.

வருடம் இரண்டாயிரத்து ஒன்பது! உலகத் தமிழர்களையே உலுக்கிப்போட்ட கோர வரலாறு நடந்த வருடமது! உயிர்களும், உடல்களும், அற்புத காதல்களும், உயிரினும் மேலான பெண்களின் கற்புகளும் கயவர்களால் களவாடப்பட்ட வருடம்!

இன்னும் பல்லாயிரம் வருடங்கள் கடந்தாலும் ஆறாத வடுவை ஆழமாக பதித்துவிட்ட வருடமது!

உள்நாட்டு யத்தம் உச்சத்தை தொட்டதில், இடம்பெயரவில் ஆளாளுக்கு தொலைந்து போனதில் அவளின் இருப்பு எங்கே என்று தெரியாது அவன் துடித்துப்போனான்.

உயிரோடு இருக்கிறாளா.. இருந்தாலும் நலமாக இருக்கிறாளா.. என் கண்மணி என்னென்ன துயர்களை அனுபவிக்கிறாளோ.. துணைக்கு நான் இல்லாமல் போனேனே.. நான் இங்கே பாதுகாப்பாக இருக்க அவள் அங்கே என்ன பாடு படுகிறாளோ.. கடவுளே எல்லோரையும் காப்பாற்று.. அவளையும் பாதுகாத்துக்கொள் என்று அவன் மனமும் உதடுகளும் இடைவிடாது உச்சரித்தபடியே இருந்தன.

உறக்கம் உணவில்லாது பைத்தியகாரனாகவே மாறிப்போனான்.

ஒருவழியாக நடந்த கோரங்கள் எல்லாம் முற்றுக்கு வந்து வீட்டினரின் தொடர்பு கிடைத்ததும், அவள் எப்படி இருக்கிறாள் என்று எடுத்ததுமே கேட்கத் துடித்த நாவை அவன் அடக்கப் பட்ட பாடு.. பெற்றவர்களை விசாரித்து, சொந்தங்களை விசாரித்து, பிறகு ஊராரை விசாரிக்கிறேன் பேர்வழி என்று அவளை சுற்றிவளைத்து அவன் கேட்டபோது, ‘உயிரோடு இருக்கிறார்களோ இல்லையோ தெரியாது’ என்றதும் தாயிடம் தன்னை மறந்து கத்திவிட்டு வைத்துவிட்டான்.

அவனின் அவள் எப்படி அவனை விட்டுவிட்டுப் போவாள்? இங்கே அவன் இதயம் இன்னும் துடித்துக்கொண்டுதானே இருக்கிறது.

இருக்காது! கடைசிவந்தாலும் இருக்காது. அவள் உயிரோடு நன்றாக இருப்பாள். என்னை தொடர்பு கொள்வாள் என்று மனம் அழுத்தி சொன்னது.

அடுத்த நிமிடமோ அவன் செவிகளை வந்தடைந்த செய்திகள் ஒவ்வொன்றுமே அவன் குலையை நடுங்க வைத்தன.

மனம் நடுங்க, தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் நண்பர்கள் என்று ஒவ்வொருவராக தேடித்தேடி அழைத்து, அவளை பாத்தீங்களாடா? என்று கேட்டபோது, யாருக்கும் அவளைப் பற்றித் தெரியவில்லை. நாட்கள் நகர்ந்துகொண்டே இருந்தது. வீட்டிலோ பெண் பார்க்கத் தொடங்கியிருந்தனர்.

அவனது முயற்சி மட்டும் ஓயவேயில்லை. நீண்டநாள் தவத்துக்கு கிடைத்த பலன்போல் நண்பன் ஒருவன் வவுனியா அகதிகள் முகாமில் அவளைக் கண்டேன் என்று சொன்னபோது அழுதே விட்டான் நிர்மலன்.

போதும்! இது போதும்! இனி எப்படியும் அவளை தேடிக் கண்டு பிடித்துவிடுவேன். அவளிடம் எப்படியடி இருக்கிறாய்.. என்ன கஷ்டம் எல்லாம் பட்டாய் என்று கேட்டு அவள் பட்ட துயர்களையும் துன்பங்களையும் நான் வாங்கிக்கொண்டிட வேண்டும்!

நெஞ்சம் உந்த, நண்பனிடம் வவுனியாவில் போய் அவளைப் பார்க்கச் சொல்ல, அவனோ தன் மனைவி வயிற்றில் குழந்தையோடு ஹாஸ்பிட்டலில் இருக்கிறாள் என்று சொல்ல, இவனின் தவிப்பையும் உணர்ந்து அவன் அவனது நண்பன் ஒருவனை வவுனியாவுக்கு அனுப்பினான். அங்கே அவன் முகாமில் யார் யாரையோ பிடித்து, தன் செல்பேசியை அவர்களின் மூலம் அவளிடம் கொடுத்துவிட்டு இவனுக்குச் சொல்லி, அந்த நம்பருக்கு இவன் அழைத்த அந்த நிமிடம்.. அவளின் குரலை கேட்டுவிட அவனது ஆவி முதற்கொண்டு அந்தம் அத்தனையும் தவியாய் தவித்துப்போனது.

“ஹலோ..” மெலிந்து நலிந்து கேட்ட குரலில், எத்தனை எத்தனையோ கேள்விகள் கேட்டுவிடத் துடித்தவனின் அத்தனை துடிப்பும் அடங்க, அவளின் குரலை உள்வாங்கி தன் உயிருக்குள் நிரப்பிக்கொண்டான்.

முன் நெற்றிக் கேசத்தை அப்படியே ஒரு கைக்குள் அடக்கிக்கொண்டு காதில் செல்லை பொருத்தியபடி அப்படியே சோபாவில் கண்களை மூடி சாய்ந்துவிட்டான் நிர்மலன்.

“ஹ..லோ.. நிர்..ம..லன்..” உடைந்து கேட்ட குரலில் அவனும் உள்ளுக்குள் உடைந்துபோனான்.

“ம்ம்..”

“நிர்மலன், எனக்கு.. எனக்கு கல்யாணம் முடிஞ்சுது. அதால இனி எனக்கு எடுக்காதிங்கோ. நான் சந்தோசமா வாழுறன். திரும்பத் திரும்ப எடுத்து அதை கெடுத்துப்போடாதிங்கோ..” என்றவள் அவனது பதிலை எதிர்பாராமலே கைபேசியை அணைத்திருந்தாள்.
துடித்துப்போனான் நிர்மலன்.
அவள் தன் கஷ்டத்தை சொல்வாள்.. கண்ணீர் விட்டழுவாள்.. என்ன எப்ப கூப்பிடப் போறீங்க என்று கேட்பாள்.. நான் உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிடக் கூடாது. அவளை தேற்ற வேண்டும்.. தைரியம் கொடுக்கவேண்டும் என்று எத்தனையோ நினைத்து வைத்தவன் சத்தியமாக இதை நினைக்கவே இல்லை.

அவனுடைய வாழ்க்கையே அவள்தான் என்று அவனிருக்க, அவள் தனக்கென்று ஒரு வாழ்க்கையை தேடிக்கொண்டதும் அல்லாமல், அவளது சந்தோசத்தை கெடுக்க வேண்டாமாமா?
அவள் சொன்னதை நம்பவும் முடியாமல், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் திரும்பவும் பைதியமாகிப்போனான் அவன். வாழ்க்கையே கசந்தது. யாரையும் நம்பப் பிடிக்கவில்லை. ஏமாற்றம் அது ஆக்ரோஷத்தை கொடுத்தது.
‘எனக்கு கல்யாணம் முடிஞ்சுது.. நான் சந்தோசமா வாழுறன்.. அதை கெடுத்துப்போடாதிங்கோ..’ இந்த வார்த்தைகளே அவனை சாகவும் வைத்தது. வாழ்ந்து காட்டவேண்டும் என்கிற வேகத்தையும் கொடுத்தது.
தாயின் விடாத தொல்லையும் சேர்ந்துகொள்ள திருமணத்துக்கு சம்மதித்தான். உஷா அவன் வாழ்வின் பொற்காலம் தான். அவளின் அன்பு மெல்ல மெல்ல அவனை முற்றிலுமாக மீட்டுக்கொண்டு வந்தது. ஆனாலும், உள்ளே ஒரு வெறி.. அவள் முன்னால் போய் நிற்கவேண்டும். நான் சந்தோசமாக வாழும் வாழ்க்கையை பார் என்று காட்ட வேண்டும்! நீயில்லாமல் நான் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை என்று முகத்தில் அறைந்தார் போல் அவளை உணரவைக்க வேண்டும்!
இன்றும் நெஞ்சு கொதித்தது, அவளிடம் ஏமாந்ததை எண்ணி. வீதியால் செல்கையில் அவள் வீட்டை பார்த்தான். பாழடைந்து, பழுதடைந்து கோரமாய் காட்சி அழித்தது.
‘அவளும் இப்படித்தான் இப்போது இருப்பாள்!’
அன்று எல்லோருமாக பக்கத்து ஊர் கோவிலுக்குச் சென்றார்கள். அவன் அம்மாதான் ஏதோ வேண்டுதல் என்று அழைத்துச் சென்றார்.
காரிலிருந்து இறங்கியதுமே அவன் செல்வங்கள் அங்குமிங்கும் ஓடத்தொடங்கினர். உஷா பூஜை பொருட்களை கையில் வைத்துக்கொண்டு பிள்ளைகளை அடக்க முடியாமல் சிரமப்பட, “நீ போ.. பிள்ளைகளை கூட்டிக்கொண்டு நான் வாறன்..” என்று மனைவியை பெற்றவர்களுடன் அனுப்பினான்.
ஒருவழியாக அவர்களை சமாளித்து கூட்டிக்கொண்டு கோவிலுக்கு அவன் சென்றபோது, சக்கர நாற்காலியில் இருந்த ஒரு பெண்ணின் தலையை கண்ணீரோடு அம்மா தடவுவது தெரிந்தது. அந்தப் பெண்ணின் சைட் பக்கம் தான் தெரிந்தது.
யார் என்கிற கேள்வி எழுந்தாலும் அவனுக்கும் மனம் பாரமாகிப் போயிற்று. ஒரு காலில்லை என்று பார்க்கவே தெரிந்தது. அங்கவீனர்கள் வேண்டுமென்றே உற்பத்தி செய்யப்பட்ட தேசமல்லவா நம் தேசம்!
நெஞ்சு கனக்க அவன் பிள்ளைகளோடு அவர்களை நெருங்க, அவ்வளவு நேரமும் அவனது தாயோடு கதைத்துக் கொண்டிருந்தவள் முகத்தை திருப்பி இவன் மனைவியை பார்த்து புன்னகைத்தாள்.
அப்போதுதான் முகம் தெரிந்தது! தெரிந்த கணத்தில் அதிர்ந்துபோய் நின்றுவிட்டான் நிர்மலன்.
இது.. அவளல்லவா!
‘எனக்கு கல்யாணம் முடிஞ்சுது. நான் சந்தோசமா இருக்கிறன்.. அதை கெடுத்துப்போடாதிங்கோ..’ நெஞ்சில் அறைந்தது அந்த வார்த்தைகள். இதுதானா அவள் சொன்ன சந்தோசம்?
நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது. எத்தனை ஆத்திரம்? எவ்வளவு ஆவேசம்? எவ்வளவு கோபம்.. கடவுளே..
திரும்பியே வரமுடியாத பாதையில் பயணித்துவிட்டானே!
கால்கள் நகர மறுத்தன! கண்கள் அவளைவிட்டு அகல மறுத்தன! இதயத்தை மட்டும் தனியே இழுத்தெடுத்து யாரோ கசக்கி பிழியும் வலி!
கட்டாயம் அவன் சுவிசுக்கு திரும்பத்தான் போகிறான். தன் வாழ்க்கையை பார்க்கத்தான் போகிறான். குழந்தைகளோடு சந்தோசமாக இருக்கத்தான் போகிறான். மனைவியோடு வாழத்தான் போகிறான். ஆனாலும், இனி என்றைக்குமே இறக்க முடியாத பாரம் நெஞ்சை அழுத்தப் போகிறது. கட்டையோடு கட்டையாக போனால் மட்டுமே அது காணாமல் போகும் போலும்! அதுகூட உறுதியில்லை!
அவன் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே தாயிடம் ஓடிய குழந்தைகளை தன் நெஞ்சோடு அரவணைத்து கொஞ்சினாள் அவள். கண்களில் அத்தனை கனிவு! முகத்திலோ சாந்தம்! அப்படியே நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவனால் தான் அவளை எதிர்கொள்ள இயலவில்லை.
பார் பார் என்று தன் சந்தோசத்தை காட்ட வந்தவன் அவளை பார்க்க முடியாமல் நின்றான். வாய் திறந்து கதைக்ககூட இயலாமல் எல்லோரையும் இழுத்துக்கொண்டு திரும்பினான்.
“இங்க ஏனம்மா தனிய இருந்து கஷ்டப்படுறாய். அங்க.. எங்கட ஊருக்கே வாவன். நாங்க எல்லோரும் இருக்கிறோம் தானே..” என்று சொன்னார் அவன் அன்னை!
அதற்கு எதுவுமே சொல்லாத அவளின் கண்கள் அவனிடம் சொன்னது,

காலங்கள் கடந்தாலென்ன
கனவுகள் சிதைந்தாலென்ன
பாதைகள் மாறினாலென்ன
உன்மேல் நான் கொண்ட
உயிர் நேசம் சொல்கிறது
நெஞ்சே.. நீ வாழ்க!

#Credit: http://tamil.pratilipi.com/read?id=5685343987695616&ret=/nithani-prabu/nenje-ne-vaazhga

Sunday, 20 November 2016

பழனியை நோக்கி ஓர் பயணம்
விக்னேஸ்வரன் கோயம்பத்தூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். இன்னும் இரு தினங்களில் பழனிக்கு சென்று தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு முடி காணிக்கை செலுத்த ஆயத்தமாகி கொண்டிருந்தான். அப்பொழுது அவனை சுற்றி இருந்த அனைவரும் அவனிடம் பழனி பயணம் குறித்து பல்வேறு குறிப்புகளையும், சென்று வரும்போது பழனியிலிருந்து வாங்கி வர வேண்டியவை பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தனர்.

"வரும்போது சித்தநாதன் கடையிலிருந்து பஞ்சாமிருதம் வாங்கிகிட்டு வா  மச்சா", "சித்தநாதன் கடையிலிருந்து திருநூறு பாக்கெட் வாங்கிகிட்டு வாங்க ஜி", "பழனி கோவில் நல்ல கோவில் தான் ஜி, ஆனால் கோவிலை சுற்றி உள்ளவர்கள் தான் மோசடி காரர்கள்", "பழனியில் கோவிலை தவிர வேறேதும் சிறப்பு இல்ல ஜி, ஊர் கூட சுத்தமாக இருக்காது", "ஆம், நம் அரசாங்கம் வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவில் உள்ள ஊரையும் மேம்படுத்த ஏதவது செய்திருக்கலாம்", "அங்கு உள்ள மோசடி காரர்களை கண்டிக்குமாறு எதாவது செய்திருக்கலாம்", "கோவில் நிர்வாகமாவது எதாவது செய்திருக்கலாம்", "கோவிலை சுற்றியே பாவம் செய்து கொண்டிருக்கின்றனர்", "நீங்கள் சக்தி வாய்ந்தவர் என்று கூறிக்கொள்ளும் முருகனாவது எதாவது செய்திருக்கலாம்", இப்படி அனைவரும் அவரவர் வாய்க்கு வந்ததை எல்லாம் விக்னேஸ்வரனிடம் கொட்டினர்.

அவனோ அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்டு அவனுக்கு தெரிந்ததையும் பேசிவிட்டு பழனிக்கு புறப்பட்டான். பொள்ளாச்சியில் அவன் தம்பி சிவகுமாரன் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறான், போதும் வழியில் அவனையும் அழைத்து செல்லலாம் என்பது அவனுடைய பிளான். அவன் அப்பா ஆதிரூபன், அம்மா அகல்யா மற்றும் தங்கை நந்திகா மூவரும் அவனுடைய சொந்த ஊரான மதுரையிலிருந்து பழனி வந்து கொண்டிருந்தனர். அண்ணனும் தம்பியும் அவர்களிடம் பழனியில் சேர்ந்துவிடலாம் என்பது பிளான்.

விக்னேஸ்வரன் உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி வழியாக பழனி செல்லும் பேருந்தில் ஏறி ஜன்னலோர சீட்டில் அமர்ந்தான், அவன் மனம் மகிழ்ச்சியிலும் பக்தியிலும் ஆழ்ந்திருந்தது. ஆனந்தமான பயணமாக உணர்ந்தான். அவனுக்கு பக்கத்து சீட்டில் ஒரு  30, 35 வயதுள்ள கேரளத்து ஆள் வந்து உட்கார்ந்தார். சிறிது நேரம் சென்றதும் அவர் இவனிடம் பழனிக்கு டிக்கெட் எவ்வளவு என்று கேட்டார். இவன் பொய் சேர ஒரு 2.30 மணி நேரம் ஆகும், ஆகையால் ஒரு 50, 60 ரூபாயிருக்குமென்று கூறினான். அவர் உண்மையாகவா என்று ஆச்சரியமாக கேட்டார், ஆம் என்றான் இவன். அதற்க்கு அவர் தமிழ்நாடு பரவாயில்லையே, 2.30 மணி நேரத்திற்கு பேருந்து கட்டணம் 50 60 தான் வருகிறது. இதுவே கேரளாவில் 90, 100 வருமென்றார். அப்படியே பேசிக்கொண்டு சென்றனர்.

பொள்ளாச்சியை நெருங்க நெருங்க அவ்வப்போது சிவகுமாரனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துக்கொண்டான். பொள்ளாச்சியை சேர்ந்ததும் தம்பிக்கு தகவல் கொடுத்து ஒரு வழியாக இந்த பேருந்து எடுப்பதற்குள் பெருந்தினுள் அழைத்துக்கொண்டான். ஆனால் பாவம் தம்பிதான், உட்கார இடமில்லாமல் நின்றுகொண்டு வந்தான், பேருந்து உடுமைலை சேர்ந்த போது பேருந்தில் இருந்து சிலர் இறங்கினர். நல்ல வேலையாக இவன் பக்கத்திலிருந்த கேரளத்துக்காரர் ஜன்னலோர சீட்டுக்கு ஆசைப்பட்டு அவராகவே வேறு இடம் சென்றுவிட்டார். சந்தாஷமாக சிவகுமாரனை அழைத்து பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டான். பழனி செல்லும் வரை இருவரும் பேசி சிரித்துக்கொண்டு சென்றார்கள். நள்ளிரவு பயணமென்றாலும் அந்த சோடையே தெரியாமல் சந்தோஷமாக பயணம் செய்தார்கள். அதிகாலை 4 மணிக்கு பேருந்து பழனிக்கு சென்றடைந்தது. அதற்க்கு முன்னதாகவே அவனது பெற்றோரும் தங்கையும் பழனியை வந்தடைந்திருந்தனர். மலைக்கு அருகேயே இருந்த சத்தியானந்தா ஆசிரமத்தில் ரூ. 300 கு அருமையான ஓர் ரூமை பதிவு செய்து அதில் காத்திருந்தனர்.

விக்னேஸ்வரனும் சிவகுமாரனும் வந்ததும் விக்னேஸ்வரனை அழைத்துக்கொண்டு முடி காணிக்கை செலுத்தும் இடத்திற்கு அவனது அப்பா அழைத்து சென்றார். அங்கே ஒரு ருபாய் பிளேடு மற்றும் முடி காணிக்கை செலுத்த தேவையான ரசீதையும் வாங்கிக்கொண்டு அங்கே கூடியுள்ள முடி எடுப்பவர்களில் யாரிடம் சென்றால் விரைவாக காணிக்கை செலுத்தலாம் என்றாராய்ந்து ஒருவரை கண்டுபிடித்து அவர்  முன் சென்றனர். விக்னேஸ்வரன் அவர் முன் அமர்ந்தான். முடி காணிக்கை செலுத்த இங்கே இலவசம் தான் என்று போர்டில் போட்டிருந்தாலும், அங்கே இருந்தவர்கள் முடி எடுப்பதற்கு முன் காணிக்கை செலுத்த வருபவர்களிடம், "சிறியவர்களுக்கு 80, பெரியவர்களுக்கு 100, உங்களுக்கு 100, சந்தோஷமா கொடுத்துட்டு திருப்தியா சாமி கும்பிட்டுவிட்டு போங்கள்" என்று சொல்லுவது வழக்கம். விக்னேஷ்வரனிடமும் இதையே சொன்னார் அவர். அவனும் சரி என்று சொல்லிவிட்டு முடி காணிக்கை செலுத்திவிட்டு அப்பாவிடம் இருந்து 100 ரூபாய் வாங்கி அவரிடம் கொடுத்துவிட்டு ரூம்கு வந்துவிட்டனர்.

வந்து குளித்துவிட்டு முருக பெருமானை தரிசிக்கும் ஆர்வத்திலும் அதிகாலையிலேயே சென்றால் மலையேறும் போது சூரியனின் தாக்கம் அதிகமிருக்காது என்பதாலும் மேலும் அதிகாலையில் மக்கள் கூட்டமும் குறைவாகத்தான் இருக்கும் ஆகையால் முருகனை விரைவாக தரிசித்துவிடலாம் என்பதாலும் 5.30 மணிக்கெல்லாம் ரூமில் இருந்து அனைவரும் புறப்பட்டு விட்டனர்.

மலை அடிவாரத்தில் நிறைய பக்த கோடிகள் சிறுகடை வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் முடி காணிக்கை செலுத்தி வருபவர்களை, வாங்க அண்ணா, வந்து சந்தணம் பூசிக்கோங்க, வாங்க அம்மா, வந்து சந்தணம் பூசிக்கோங்க, வாங்க தம்பி , வந்து சந்தணம் பூசிக்கோங்க என்று அன்பாக அழைத்து கொண்டிருந்தனர். ஆனாலும் ஓரிருவரை தவிர யாரும் அவர்களிடம் சந்தணம் பூசிக்கொள்வதாக தெரியவில்லை. காரணம் அவர்கள் சந்தணம் பூசிக்கொள்ளுங்கள் என்றழைத்து குறைந்த விலையே உள்ள பொருள்களை இவர்களை ஏமாற்றி அதிக விலை கொடுத்து வாங்க வைத்துவிடுவார்கள் என்ற பயமே. விக்னேஸ்வரனும் யாரையும் கண்டுகொள்ளாமல் அடிவாரத்தை நோக்கி அவனது பெற்றோருடனும் உடன் பிறப்புகளுடனும் சென்று கொண்டிருந்தான். எனினும் அடிவாரத்தின் அடியில் இருந்த ஒரு வியாபாரி அம்மா இவர்களிடம் மேலே கடைகள் ஏதும் இல்லை. ஆகையால் இங்கேயே அபிஷேக பொருட்களை வாங்கிக்கொண்டு தலையில் சந்தணம் பூசிக்கொண்டு செல்லுங்கள் என்று சொன்னார். ஓ, சரி என்று கூறிவிட்டு அவர்களிடமே சந்தணம் பூசிக்கொண்டு பொருட்களையும் வாங்கிக்கொண்டு, அடிவாரத்தில் இருந்த விநாயகருக்கு ஒரு தேங்கையையும் உடைத்துவிட்டு கும்பிட்டுவிட்டு நிதானமாக மன அமைதியுடன் படி ஏறி மேலே சென்றனர்.

அப்போது விக்னேஸ்வரனின் தாயார் அகல்யா அவனிடம் ஒரு பாக்கெட் சூடத்தை கொடுத்து செல்லும் வழியில் எங்கெல்லாம் சூடம் எரிகிறதோ, அங்கெல்லாம் இதிலிருந்தும் ஒரு சூடத்தை எடுத்து வைத்துவிட்டு செல் என்று கூறினார். அவனும் அவ்வாறே சூடத்தை அந்த பாக்கெட் தீரும் வரை வைத்துக்கொண்டே சென்றான். மலையின் உச்சியை நெருங்கும் போது சூடமும் தீர்ந்துவிட்டது. பிறகு மேலே சென்று அர்ச்சனை சீட்டு வாங்கிக்கொண்டு முருக பெருமானை தொழுவதற்காக சென்றுகொண்டிருந்தனர். அங்கே பக்கத்தில் சில வியாபார கடைகளும் இருந்தன. அங்கே கீழே அந்த அம்மாவிடம் 100 ருபாய் கொடுத்து வாங்கிய அர்ச்சனை பொருட்கள் அனைத்தும் இங்கே 25 ரூபாய்க்கு வாங்க முடியும் என்பதை அறிந்ததும் அமைதியாக பயபக்தியோடு இருந்த  விக்னேஸ்வரனுக்கு அந்த அம்மா மீது சிறிது கோவம் வந்தது. பணம் போய்விட்டதே என்பதற்க்காக அல்ல, ஏன் இப்படி பொய் சொல்லி பழனியின் பெயரை இவர்கள் கெடுக்கிறார்கள் என்பதற்காக. இருந்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் முருகப்பெருமானை தரிசிக்க சென்றான்.

போதும் வழியில் சில கோவில்களும் இருந்தன. அங்கே இருந்த ஐயர்கள் வரும் பக்தர்களை வழி மறித்து வந்து சாமி கும்பிட்டுவிட்டு செல்லுங்கள் என்று கூறினர். சாமி கும்பிட்டு முடித்ததும் திருநீறு வைத்துவிட்டு தர்ச்சனை வைத்துவிட்டு செல்லுங்கள் என்றும் கூறினர்.

அங்கே உள்ள முருக பெருமானை முனிவர் போகர் மூலிகையாலேயே வடிவமைத்துள்ளார் என்பது தமிழனின்  பெருமையாக இருந்தாலும் 1000 ஆண்டுகள் கடந்தும் மூலிகையால் ஆன முருக பெருமானுக்கு ஏதும் ஆகவில்லை என்பது முருகனின் சக்தியாகவே பக்தர்களால் பார்க்கப்படுகிறது. இங்கே இருக்கும் முருகனுக்கு அபிஷேகம் இல்லை என்றாலும் பக்தர்கள் வாங்கிக்கொண்டு வரும் தேங்காயை அவர்கள் மனம் கோணக்கூடாது என்பதற்க்காக அங்கே உள்ள ஐயர்கள் பக்தர்களிடம் சிறிது பணம் 50 அல்லது 100 வாங்கிக்கொண்டு கோவிலின் ஏதாவது ஒரு இடத்தில் தேங்காயை உடைத்துவிட்டு பக்தர்களிடம் அர்ச்சனை பொருட்களை திருப்பி கொடுப்பது வழக்கம்.

அவ்வாறே பக்தியுடன் முருக பெருமானை தரிசித்துவிட்டு அர்ச்சனை பொருட்களையும் வாங்கிக்கொண்டு மேலிருந்து அடிவாரத்தை நோக்கி வந்தனர். இருந்தாலும் விக்னேஸ்வரனுக்கு அந்த அம்மாவிடம் அவர்கள் செய்யும் செய்யும் தவறை சுட்டிக்காட்டி அதனால் வரும் விளைவுகளையும் விளக்கி இனிமேலும் இதுபோல் நடந்துகொள்ளாதீர்கள் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.. ஆகையால் கீழே வந்ததும் அவர்களிடம் சென்று நீங்கள் இந்த மாதிரி செய்யாதீர்கள், வெளியில் பழனியில் உள்ள மக்களை ஏமாற்றுக்காரர்கள் என்றெல்லாம் பேசிகொள்றர்கள், இது சரியான போக்கு அல்ல என்று விளக்கினான். ஆனால் அதற்குள் அந்த அம்மா குறுக்கிட்டு அப்படித்தான் நாங்கள் ஏமாற்றுவோம், ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரைக்கும் ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள், என்று சத்தம் போட்டார்கள், இதை சற்றும் எதிர்பாராத விக்னேஸ்வரன் மனகுலைந்து போனான்.

இதையறிந்த அவனது தந்தை ஆதிரூபன், இதற்கெல்லாம் கோவம் கொல்லாதேடா, அவர்கள் இடத்தில இருந்து சற்று யோசித்து பார், அவர்கள் அப்படி சொன்னால்தான் வியாபாரம் செய்ய முடியும், இல்லையென்றால் யாரும் வாங்க மாட்டார்கள், பிழைப்பு நடத்துவது அவ்வளவு எளிதல்ல விக்னேஷ், அவர்கள் வீட்டிலும் அடுப்பு எறியவேண்டுமல்லவா, யோசித்துப்பார் என்று கூறினார்.

இருந்தாலும் விக்னேஷின் மனம் கேட்கவில்லை. அடுக்கடுக்காக அவன் மனதில் பல கேள்விகள் உதித்தன. ஒரு சில கேள்விகளை கேட்டான். சரி மேலே கடைகள் இல்லையென்று பொய் சொல்ல வேண்டுமென்ற சூழ்நிலை உள்ளதென்றாலும் ஏன் அதை, 2 மடங்கு கூட இல்லை, 4 மடங்கு அதிகமாக வைத்து விற்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் தந்தை மேலே கோவிலில் உள்ள கடைக்கு ஒரு அர்ச்சனை தட்டிற்கு 10 ரூபாய் லாபம் கிடைக்கிறதென்றால் இவர்களுக்கு 15இல் இருந்து 20 ருபாய் வரை கிடைக்கும் அவ்வளவு தான், இவர்கள் போலிஸுக்கு மாமூல் கொடுக்க வேண்டும், மேலும் அந்த இடத்திற்கான வடகை கொடுக்க வேண்டும், மேலும் பல சிக்கல்கள் அவர்களுக்கும் உள்ளது, யோசித்துப்பார், புரியும் என்றார்.

எதற்காக இப்படி தொழில் செய்ய வேண்டும் என்றான் இவன் அடுத்த கணமே, வேறு என்ன செய்து பிழைப்பு நடத்தலாம், பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், நல்ல வேலை பார்த்து கொடுக்க வேண்டும், திருமணம் செய்து வைக்க வேண்டும், வேறு என்ன வேலை செய்யலாம் என்று நீ நினைக்கிறாய் என்று இவனிடம் பதில் கேள்வியை அவர் எழுப்பினார்.

இவனும் பதில் ஏதும் சொல்லாமல், அப்போ தவறு எங்கே நடக்கிறது, அரசியல் வாதிகளிடமா, மேலதிகாரிகளிடமா, கோவில் நிர்வாகத்திடமா, வியாபாரிகளிடமா, இல்லை மக்களிடம்தானா, இதை யார் சரி செய்வது என்று யோசித்துக்கொண்டே கனத்த இதயத்துடன் கோய்ம்பத்தூருக்கே  திரும்பி வந்து தொடர்ந்து அந்த தனியார் நிறுவனத்துக்கே வேலைக்கு சென்று கொண்டிருக்கிறான். 

Saturday, 12 November 2016

காகம் கரைந்தால் விருந்தினர் வருவாரா?அந்த காலத்தில் மாலுமிகள் கடல் பயணம் மேற்கொள்ளும்பொழுது கடற்கரை எந்த பக்கம் உள்ளது என்று கண்டுபிடிப்பதற்காக சில காகங்களை தங்களோடு கொண்டு செல்வர். நடுக்கடலில் கப்பல் பயணித்துக்கொண்டிருக்கும் பொழுது கடற்கரைக்கு செல்ல விரும்பினால், கடற்கரை எந்த பக்கம் உள்ளது என்று கண்டுபிடிக்க, அவர்கள் தங்களோடு கொண்டுவந்துள்ள சில காகங்களை கட்டவிழ்த்து விடுவார்கள்.. அந்த காகங்கள் எந்த திசையில் பயணிக்கிறதோ, அந்த திசையில் தான் கரை உள்ளது என்று மாலுமிகள் வெகுவாக கணித்துவிடுவார்கள்.

அதே சமயம் அந்த காகங்கள் ஊருக்குள் கரைந்து கொண்டே சென்று எதாவது ஒரு மரத்திலோ அல்லது வீட்டின் கூரையிலோ அமர்ந்து கரைந்து கொண்டிருக்கும். அதை பார்க்கும் ஊரார் கடலில் இருந்து மாலுமிகள் வரப்போகின்றனர் என்பதை புரிந்து கொண்டு, வருபவர்களை விருந்தாளியாக பாவித்து, வந்ததும்  இளைப்பாற தேவையான வசதிகளை செய்து கொடுப்பர்.

இச்செயலே பின்னாளில் காகம் கரைந்தால் விருந்தாளிகள் வருவார் என்று சுருக்கமாக சொல்லப்பட்டது.